விஜயதாரணி ஆரம்பம்தான்.. அதிமுக, காங்கிரசிலிருந்து பாஜக தாவப் போகும் தலைகள் இவர்களா? வெளியான தகவல்!
சென்னை: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் தமிழ்நாட்டு களத்தை பரபரப்பாக்கிவிட்டது காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணியின் பாஜக தாவல். விஜயதாரணி (விஜயதரணி)யை தொடர்ந்து காவி கட்சிக்கு தாவப் போகும் கதர் கட்சி, இலை கட்சி தலைவர்கள் குறித்துதான் இப்போது அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.
லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தரும் போது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 'தலைவர்கள்’ பாஜகவில் இணைவார்கள் என கூறப்பட்டது. இதற்கு முன்னோட்டமாக அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏக்கள் என சீனிலேயே இல்லாத 1970,1980களின் பட்டாளத்தை டெல்லிக்கு அழைத்துப் போய் சீன் போட்டது தமிழ்நாடு பாஜக. இது கேலிக்கூத்தாகிப் போனது.

இதனைத் தொடர்ந்துதான் தற்போது பெரிய விக்கெட் என்ற அளவில் விஜயதாரணியை காங்கிரஸில் இருந்து தூக்கிவிட்டது பாஜக. விஜயதாரணி, பாஜகவுக்கு போகப் போகிறார் என்கிற செய்தி கடந்த சில வாரங்களாகவே பேசப்பட்டதுதான். விஜயதாரணி காங்கிரஸை விட்டு வெளியேறியது சொந்த தொகுதி காங்கிரஸ் கட்சியினரே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஆனால் காவி கட்சியினரோ, இப்பதான் எங்க ஆட்டமே ஆரம்பமாகி இருக்கிறது.. இனி அடுத்தடுத்து விழப் போகும் விக்கெட்டுகள் எல்லாம் 'சம்பவம்’தான் என சிலிர்த்தபடி பேசுகின்றனர். அப்படி யாரெல்லாம் காவி கட்சிக்கு தாவ தயாராக இருக்கிறார்களாம்? என கேட்டால் கிசுகிசுத்தபடியே ஒரு பெரிய பட்டியலையே வாசிக்கின்றனர். அதில் இலை கட்சியில் இருந்து காவி கட்சிக்கு தாவி மத்திய அமைச்சர் பதவியை அனுபவித்துவிட்டு கதர் கட்சியில் இணைந்த சிட்டிங் எம்பி ஒருவரும் இருக்கிறாராம். அந்த தற்காலிக கதர் தலைவருக்கு மகனது எதிர்காலம் முக்கியம் என்பதால் காவி ஜோதியில் கரைந்து பார்க்கலாம் என அந்திம காலத்தில் அந்தர் பல்டி அடிக்க காத்திருக்கிறாராம். இதேபோல மேற்கு சீமையில் 'மணிகளால்’ ஓரம் கட்டப்பட்ட மாஜி அமைச்சர், சிட்டிங் எம்.எல்.ஏ ஒருவர் இலை கட்சியில் இருந்து தாவ இருக்கிறார்களாம். தனி ஆவர்த்தனம் வாசிக்கும் மாஜி தர்மயுத்தம் கோஷ்டியையும் மொத்தமாக தட்டித் தூக்கிவிட்டுதான் தேர்தல் களத்தில் கெத்தாக பிரசாரம் செய்யப் போகிறதாம் பாஜக. இந்த பட்டியலில் ஆளும் தரப்பில் இருந்து தற்போதைக்கு எவரும் இல்லை என்கிற தகவலையும் காவி கட்சியினர் கண் சிமிட்டலுடன் சொல்கின்றனர்.. அப்படியா?












Click it and Unblock the Notifications