தாமரை சின்னத்துல போட்டியிட்டால் அள்ளி தருவோம்..சைக்கிள் எனில் இவ்ளோதான்- ஜிகே வாசனை பாஜக வளைத்த கதை!
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துவிட்டது ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ். பாஜக கூட்டணியில் இணைந்த ஜிகே வாசனை பாஜக எப்படி வளைத்தது என்பது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணையவில்லை. இந்த இரு கட்சிகளும் அதிமுகவுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

பிரதமர் மோடி நாளை திருப்பூர் பல்லடம் பொதுக் கூட்டத்தில் பேச இருக்கிறார். இதனால் தமிழ்நாட்டில் சில கட்சிகளையாவது கூட்டணியில் இணைத்து பல்லடம் பொதுக்கூட்ட மேடையேற்றியாக வேண்டிய நெருக்கடியில் சிக்கியது பாஜக.
ஊசலாட்டத்தில் இருந்த வாசன்: பாஜகவைப் பொறுத்தவரையில் ஜிகே வாசனை முதலில் வளைத்துப் போட்டு ஆட்டத்தை தொடங்குவது என முடிவெடுத்தது. ராஜ்யசபா எம்பியாக உள்ள வாசனுக்கு அப்பதவியை அதிமுகவிடம் இருந்து பெற்று கொடுத்தது பாஜகதான். அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வாசனுக்கு எம்பி பதவி வாங்கிக் கொடுத்த பாஜகவுக்கு நன்றி கடனாக கூட்டணியில் சேர்ந்தாக வேண்டும் என அழுத்தம் தரப்பட்டதாம். ஆனால் வாசனின் தமாகா செயற்குழுவில் பெரும்பாலான நிர்வாகிகள், அதிமுக கூட்டணிக்குதான் போக வேண்டும் என அடம் பிடித்த நிலையில் என்ன முடிவெடுப்பது என தெரியாமல் வாசன் தத்தளித்துக் கொண்டிருந்தாராம்.
ஜிகே வாசனை வளைத்தது இப்படித்தானாம்: இந்த நிலையில் ஜிகே வாசனை பாஜகவின் மேலிடப் பிரதிநிதி அரவிந்த் மேனன் திடீரென சென்னையில் சந்தித்து பேசி கூட்டணியை இறுதி செய்திருக்கிறார். இந்த சந்திப்பின் போது, தமாகாவுக்கு 5 லோக்சபா தொகுதிகள் பிளஸ் 1 ராஜ்யசபா சீட் தருவதாக பாஜக தரப்பு உறுதி தந்ததாம். அதே நேரத்தில் 5 லோக்சபா தொகுதிகளிலுமேயே பாஜகவின் தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதிக்க ஜிகே வாசன் ரொம்பவே ஆடிப்போனாராம். தமது கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளின் முடிவுக்கு எதிராகத்தான் பாஜக பக்கமே போகிறோம்; அங்கேயும் தாமரை சின்னத்தில்தான் போட்டி என்றால் தம்மை தவிர கட்சியில் இனி யாருமே இருக்க மாட்டார்களே என அதிர்ச்சியில் உறைந்தாராம் ஜிகே வாசன். இதனை புரிந்து கொண்ட பின்னர் பாஜக தரப்புதான், 3 லோக்சபா சீட் வாங்கி கொள்ளுங்கள்.. உங்க சைக்கிள் சின்னத்திலேயே போட்டியிடுங்கள் என இன்னொரு ஆப்சனை கொடுத்திருக்கின்றனர். இதனையும் ஜிகே வாசன் அரை மனதுடன் ஏற்றுக் கொண்டாராம்.
எந்தெந்த தொகுதிகள்?: சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பாஜக கூட்டணியில் இணைவதாக வாசன் அறிவித்த போது, அழுத்தம் திருத்தமாக தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக வெளியான தகவல்களில் உண்மை எதுவும் இல்லை என சுட்டிக்காட்டி இருந்தார். தற்போதைய நிலையில் ஜிகே வாசனுக்கு மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாமக்கல், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய 5 தொகுதிகளில் 3-ஐ ஒதுக்க இருக்கிறதாம் பாஜக. அதிமுக கூட்டணியில் இணைந்து ஈரோடு தொகுதியில் போட்டியிடலாம் என கனவு கண்டவர் தமாகாவின் யுவராஜ். இப்போது பாஜகவுடன் கூட்டணி என வாசன் அறிவித்த உடன் ஈரோடுக்கு குறிவைத்த யுவராஜ் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டார். இதனால் ஈரோடு அல்லாமல் வேறு 4 தொகுதிகளைத்தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க இருக்கிறது என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications