‛திமுகவை அசைக்க முடியாது’.. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவை முந்திய பாஜக - டைம்ஸ் நவ் சர்வே
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் வெல்லும் என்பது பற்றி டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு மேற்கொண்ட நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்காவிட்டாலும் கூட கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தமட்டில் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.

திமுக தலைமையிலான ‛இந்தியா' கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளது.
தற்போது திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக உள்ளன. விசிக 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கழகம் உள்ளிட்ட கட்சிகளும் தொகுதி பங்கீடு முடிவாகி விட்டது. காங்கிரஸ் கட்சியுடன் இழுபறி நீடித்து வருகிறது. அதேபோல் தேமுதிக, பாஜகவும் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலையொட்டி டைம்ஸ் நவ் - இடிஜி ரீசர்ஜ் அமைப்பு சார்பில் இந்தியா முழுவதும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 357 பேரிடம் சர்வே நடத்தப்பட்டது. இதில் 85 சதவீதம் பேரிடம் நேரிலும், 15 சதவீதம் பேரிடம் போன் மூலமாக பேசியும் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வே ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ‛இந்தியா' கூட்டணி தான் அதிக இடங்களை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அமைந்துள்ள ‛இந்தியா' கூட்டணி குறைந்தபட்சம் 29 முதல் அதிகபட்சமாக 35 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அதிமுக தலைமையிலான கூட்டணியை விட பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 2 முதல் 6 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தான் அதிமுக தலைமையிலான கூட்டணி 1 முதல் 3 இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டணியை தவிர்த்து மற்றவர்கள் 0-2 தொகுதி வரை வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications