352இல் இருந்து 297க்குள் சுருண்ட பாஜக? 91 இல் இருந்து 225 ஆக ஏறிய காங்கிரஸ்! #2019 VS 2024 ஒப்பீடு
சென்னை: 2019இல் 352 தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்த பாஜக கூட்டணி இந்த முறை வெறும் 296 தொகுதிகளில் தான் முன்னிலை வகித்து வருகிறது. இந்தத் தரவுகளின் படி பாஜக மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும்.

அப்படிப் பார்த்தால் அதிக பெரும்பான்மை எந்தக் கட்சிக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், கடந்த தேர்தல்களில் பாஜகவுக்கு இருந்த செல்வாக்கு இந்தத் தேர்தலில் சரிவைச் சந்தித்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட 291 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக தனியாக 238 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 98 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்படுகிறது. தனிப் பெரும்பான்மை பெற பாஜகவிற்கு 40 இடங்களுக்கு மேல் இன்னும் கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே கருதப்படுகிறது.
பாஜகவின் கோட்டையான உத்தரப் பிரதேசத்திலேயே அந்தக் கட்சி அதிக இடங்களில் தோல்வி அடையும் நிலையில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் இந்தியா கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
பாஜகவின் என்டிஏ கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவின் கோட்டையிலேயே இந்தியா கூட்டணி மிகப்பெரிய அளவில் முன்னணி பெற்றுள்ளது.

தேர்தல் பரப்புரை தொடங்கியது முதலே உபியில் பாஜக இந்த முறை பின்னடைவைச் சந்திக்கும் என்று அரசியல் வியூகர்கள் பலரும் கருத்துக் கணிப்பை வெளியிட்டு வந்தனர். காரணம், கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய இரண்டு கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன.
ஆகவே மிக மோசமான தோல்வியை 2019இல் சந்தித்தன. அதை உணர்ந்தே இம்முறை இருகட்சிகளும் இணைந்து களம் காண முடிவு செய்தன. அந்த முடிவு பல சாதகமான மாற்றங்களை இந்தியா கூட்டணிக்குத் தந்துள்ளது என்றே இப்போதுவரை வெளியான முடிவுகளை வைத்து ஓரளவு கணிக்க முடிகிறது.
எப்படிப் பார்த்தாலும் பாஜகவுக்குக் கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2024 தேர்தல் இப்போது வரை வெளியாகிவரும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.
அதாவது கடந்த 2019 தேர்தலில் முற்பகல் நிலவரப்படி பாஜக 352 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஆனால் இந்த முறை பகல் 11:44 நிலவரப்படி பாஜக கூட்டணியான என்டிஏ 296 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. கிட்டத்தட்டக் கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் 56 தொகுதிகளில் அக்கட்சி சரிவைச் சந்தித்து வருகிறது.
அதேபோல் கடந்த 2019இல் வெறும் 91 தொகுதிகளில்தான் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்றே தெரிகிறது. அதாவது காங் தலைமையிலான இந்தியா கூட்டணி 226 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது இந்தக் கூட்டணி.
அப்படிப் பார்த்தல் கடந்த முறையைவிட 135 தொகுதிகளில் இந்தக் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
இவைத் தவிர, கடந்த 2019இல் இந்த இரண்டு கூட்டணியிலும் இல்லாத பிற கட்சிகள் 99 முன்னிலையிலிருந்தன. ஆனால், இந்த முறை 21 தொகுதிகளில் தான் பிற கட்சிகள் முன்னிலையில் உள்ளன. பிற கட்சிகளின் இடங்களை முக்கால்வாசியை இந்தியா கூட்டணி தன் பக்கம் இழுத்துள்ளது என்பதை இந்தத் தரவுகள் மூலம் உணர முடிகிறது.












Click it and Unblock the Notifications