கையை ஆட்டிய விஜயகாந்த்.. தம்ஸ் அப் பார்த்து உற்சாகத்தில் துள்ளிக்குதித்த தொண்டர்கள்!
சென்னை: பிறந்தநாளை முன்னிட்டு தன்னை காண வந்த தொண்டர்களைப் பார்த்து கையை ஆட்டி தம்ஸ் அப் காட்டினார் விஜயகாந்த். அவரைப்பார்த்து கேப்டன்.. கேப்டன் வாழ்க என்று ரசிகர்களும் தொண்டர்களும் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 71வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கட்சி தொண்டர்கள் விஜயகாந்தின் பிறந்த நாளை மாவட்ட வாரியாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். விஜயகாந்தின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

விஜயகாந்தின் உடல் நிலை குறித்து வந்த செய்திகள் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் விஜயகாந்தின் தரிசனம் இன்று தொண்டர்களுக்குக் கிடைத்தது.
ஒவ்வொரு பிறந்த நாளிலும் கட்சி அலுவலகத்திற்கு வரும் விஜயகாந்த் அன்றைய தினம் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் விஜயகாந்த் தொண்டர்களை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி விஜயகாந்தை சந்திப்பதற்காக காலை முதலே தொண்டர்கள் தேமுதிக அலுவலகத்தில் குவிந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தொண்டர்களை பார்ப்பதற்காக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்த விஜயகாந்தை தொண்டர்கள் கேப்டன்.. கேப்டன் வாழ்க என்ற முழக்கத்துடன் வரவேற்றனர்.
ஆட்டம் பாட்டம் என்று தேமுதிக அலுவலகமே அமர்களப்பட்டது. தொண்டர்களின் முழக்கத்தைக் கேட்டு உற்சாகமடைந்த விஜயகாந்த் தனது இரு கைகளையும் உயர்த்தியபடி தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். இது போதும் எங்களுக்கு என்று தொண்டர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.












Click it and Unblock the Notifications