Lottery: ஒரே வருசத்தில் எல்லாம் மாறிப்போச்சு! லாட்டரியில் 240 கோடி பரிசு வென்ற இந்திய ஐடி ஊழியர் சொன்ன விஷயம்
சென்னை: கடந்த ஆண்டு லாட்டரியில் ரூ.240 கோடி பரிசாக வென்ற இந்திய ஐடி ஊழியர் தற்போது ஒரே வருஷத்தில் எல்லாம் மாறிவிட்டதாக கூறியுள்ளார். எனக்கு பிடித்த மாதிரி வாழ முடிந்தது. என் குடும்பத்திற்கு செய்த உதவிகள் எல்லாம் மகிழ்ச்சியை தருகிறது. அபுதாபி விமான நிலையம் அருகே சொத்து வாங்கியிருக்கிறேன். துபாய் மெரினா அருகேயும் சொத்துக்கள் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வந்த ஐதாராபத்தை சேர்ந்த அனில்குமார் பொல்லா என்ற இளைஞருக்கு கடந்த ஆண்டு, அங்குள்ள லாட்டரியில் முதல் பரிசாக ரூ.240 கோடி பரிசு கிடைத்தது. தனது தாயார் பூலட்சுமியின் பிறந்தநாளைக் கொண்டிருந்த லாட்டரி எண்ணை தேர்வு செய்த அனில் குமாருக்கு இந்த பெரும் தொகை பரிசாக விழுந்தது.

ரூ.240 கோடி பரிசு வென்ற அனில்குமார்
லாட்டரியில் 240 கோடி பரிசு வென்று கிட்டதட்ட ஓராண்டு நிறைவாகியுள்ள நிலையில், இந்த ஓராண்டு காலத்தில் எல்லாம் மாறிவிட்டதாக சொல்லியிருக்கிறார். அதாவது, பணம் அடித்த புதிதில் இருந்த உற்சாகம் எல்லாம் தற்போது போய்விட்டதாக அனில் குமார் பெல்லா கூறியுள்ளார்.
சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த அனில் குமார் பெல்லாவின் வாழ்க்கை ஒரே நாளில் மாறிப்போனது. ரூ. 240 கோடி ரூபாய்க்கு அதிபதியான அனில்குமார் பெல்லா அதை கடந்த ஓராண்டில் எப்படி எல்லாம் செலவு செய்தேன் என்பது பற்றி பகிர்ந்த தகவல் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அனில் குமார் பெல்லா கூறியதாவது:-
என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது
லாட்டரியில் பரிசு அடித்த பிறகு நடந்த முக்கியமான விஷயம் என்னவென்றால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டேன். லாட்டரியில் பரிசு வென்றது எனது எனது வாழ்க்கையையும் லட்சியங்களையும் மாற்றியமைத்துவிட்டது. ஐபோன் வாங்கினேன். விலை உயர்ந்த ஆடம்பர கடிகாரங்களை வாங்கினேன். எனது தாயாருக்கு தங்க நகை வாங்கி கொடுத்தேன். எனது தாயாரின் நீண்ட கால கனவாக அது இருந்தது.
எனவே, தங்க நகைகளை வாங்கி எனது தாயாருக்கு பரிசாக அளித்தேன். இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனது தந்தைக்கு இருந்தது. அதற்காக விவசாய நிலம் வாங்கி கொடுத்தேன். எனது தந்தை பழைய வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அங்கேதான் தற்போதும் வசிக்கிறோம். எனது குடும்பத்திற்கு நான் செய்த அனைத்தும் எனக்கு மிகவும் ஸ்பெஷலாகவே உள்ளது.
துபாயில் சொத்து வாங்கி இருக்கிறேன்
எனக்கு நான் செய்ததை விட எனது குடும்பத்திற்கு செய்ததுதான் அதிக மகிழ்ச்சியை கொடுத்தது. பரிசு விழுந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. பரிசு விழும் போது இருந்த உற்சாகம் தற்போது காணாமல் போயிவிட்டது. கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தேன். பாலி, தாய்லாந்து, ஆம்ஸ்டெர்டாம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்தேன்.
எனது பல விருப்பங்களை நிறைவேற்ற முடிந்தது. நீண்ட கால நிதி திட்டத்திற்கு ஏற்ற வகையில் ஒரு பிசினசை தொடங்குவது பற்றி ஆலோசித்து வருகிறேன். அபுதாபி விமான நிலையம் அருகேயும் துபாய் மெரினா அருகேயும் சொத்துகளை வாங்கியுள்ளேன்" என்றார்.





Click it and Unblock the Notifications
