பட்ஜெட் விலையில் மீண்டும் ஸ்மார்ட்போன்கள்.. இந்திய மொபைல் மார்க்கெட்டில் நடக்கப்போகும் மாற்றம்!
சென்னை: இந்திய மொபைல் சந்தையில் சமீபத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது ரூ.30,000க்கு குறைவாக நல்ல தரமான ஸ்மார்ட்போன்கள் கிடைப்பது கிடையாது. இதனால் சாமானிய மக்கள் ஸ்மார்ட்போன் சந்தையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் குறைவான ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை மீண்டும் சந்தையில் இறக்க மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன.
மார்க்கெட்டில் மெமரி சிப்கள் மற்றும் பிராசஸர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சாம்சங், ஷாவ்மி போன்ற முன்னணி நிறுவனங்கள் லாப நோக்கத்திற்காக ரூ.10,000க்கும் குறைவான விலையிலான என்ட்ரி-லெவல் போன்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டு பிரீமியம் மற்றும் அதிக விலை கொண்ட போன்களை நோக்கி நகர தொடங்கியுள்ளன.

ஆய்வு நிறுவனமான IDC-ன் தரவுகளின்படி 2026ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்த என்ட்ரி-லெவல் மொபைல்களின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 74.3% என்ற பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த சந்தையில் இவற்றின் பங்கு 15.6%லிருந்து வெறும் 4.5% ஆக குறைந்திருக்கிறது.
பெரும்பாலான பிராண்டுகள் விலையை ரூ.30,000க்கு மேல் உயர்த்தியிருந்தாலும் இந்தியாவின் உயர்தர போன்களுக்கான சந்தை வெறும் 3 கோடியாகவே இருக்கிறது. அதே நேரத்தில்.. குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ரூ.10,000க்கு குறைவான பட்ஜெட் போன்களுக்கான தேவை இன்னும் 4-5 கோடியாக வலுவாக இருக்கிறது. எனவேதான் குறைந்த ரேம் கொண்ட போன்களை மீண்டும் சந்தைக்கு கொண்டு வர மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன.
பெரிய நிறுவனங்கள் விலகியதால் ஏற்பட்ட இந்த கேப்-ஐ பயன்படுத்திக்கொள்ள Itel, Lava போன்ற பிராண்டுகள் மீண்டும் 2GB-3GB ரேம் கொண்ட எளிய 4G போன்களை அறிமுகம் செய்ய தொடங்கியிருக்கின்றன. சப்ளை பற்றாக்குறை மற்றும் சிப்செட் விலை உயர்வால், விலையை ரூ.8,000-9,000க்குள் கட்டுப்படுத்த இத்தகைய குறைந்த திறன் கொண்ட ரேம் சிப்களை நிறுவனங்கள் நம்ப வேண்டியுள்ளது.
நடப்பு ஆண்டில் itel நிறுவனம் 2GB RAM/64GB மெமரியுடனும், லாவா நிறுவனம் 3GB RAM/64GB மெமரியுடனும் என்ட்ரி-லெவல் 4G போன்களை சந்தையில் வெளியிட்டிருக்கின்றன. அதேபோல பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற வெப்சைட்டில் அதிகம் அறியப்படாத சில சிறிய நிறுவனங்கள் உதாரணத்திற்கு Siavantage, Oneme,Zeno போன்ற நிறுவனங்கள் பார்ப்பதற்கு ஐபோன் போன்ற தோற்றத்தை கொண்ட ஆனால்.. மிக குறைந்த செயல்திறன் கொண்ட போன்களை விற்பனை செய்து வருகின்றன.
ஆண்ட்ராய்டு OS தற்காலத்தில் அதிக செயல்திறனை கேட்பதால் இத்தகைய போன்கள் முன்பு புறக்கணிக்கப்பட்டன. இருப்பினும் கூகுள் நிறுவனம் தனது Gemini AI தொழில்நுட்பத்தின் ஒரு பதிப்பை 2GB ரேம் கொண்ட மொபைல்களிலும் இயங்கும் வகையில் மாற்றியமைப்பதாக அறிவித்திருக்கிறது. எனவே போலி பிராண்டுகள் அதிகம் விற்பனையாக வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
