கேஸ் கனெக்ஷன் இல்லை.. ரசீதும் இல்லை, சர்க்கரை கார்டும் கிடையாதா? தமிழக தம்பதிகளுக்கு வந்த சிக்கல்
சென்னை: புதிய கேஸ் இணைப்பு வழங்கப்படாமலேயே உள்ள நிலையில், இது பல்வேறு தரப்பினரை வெகுவாக பாதித்து வருகிறது.. முக்கியமாக, திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் செல்லும் இளம் தம்பதிகள் மானிய விலை கேஸ் கிடைக்காமல் கமர்ஷியல் சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு வாங்கி அவதிப்பட்டு வருகிறார்கள்.. கேஸ் சிலிண்டர் கனெக்ஷன் இன்னும் வழங்கப்படாததால், அதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தனி வீட்டில் வசிப்பதற்கான சான்றாகப் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களுக்குக் கியாஸ் இணைப்பு ரசீது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இணைப்பும் கிடைக்காமல் ரேஷன் கார்டுக்கும் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.. இதன் எதிரொலியாக இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது..
இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் தலைதூக்கியது. சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் அவசர நடவடிக்கையாக, மத்திய அரசு புதிய சமையல் கேஸ் இணைப்புகள் வழங்குவதற்கு தடை விதித்து விட்டது.. ஆனால் இந்த தடை இன்னமும் நீடித்தபடியே உள்ளது.. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, இளம் தம்பதிகள்தான்..
இளம் தம்பதிகள் அவதி
திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் செல்லும் இந்த தம்பதிகள், கேஸ் கனெக்ஷன் இல்லாமல் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.. கேஸ் சிலிண்டர் இல்லாததால், தனிக்குடித்தனமும் செல்ல முடியவில்லை..
அப்படியே தனிக்குடித்தனம் சென்றாலும், சமையல் செய்வதற்கு மானிய விலையிலான வீட்டு உபயோக சிலிண்டர் கிடைக்காததால், குறைந்த வருமானம் ஈட்டும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் மாற்றுவழியின்றி கூடுதல் விலை கொடுத்து கமர்ஷியல் பயன்பாட்டு சிலிண்டர்களை வாங்கும் நிலைமைக்கு ஆளாகி உள்ளார்கள்.. இதனால் அவர்களின் மாதாந்திர குடும்ப பட்ஜெட்டும் எக்குத்தப்பாக எகிறிவிடுகிறது.
புதிய கேஸ் இணைப்பு ரசீது
அதுமட்டுமல்ல, புதிய ரேஷன் கார்டு வாங்குவதிலும் இதேபோன்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. தனிக்குடித்தனம் வசிக்கும் தம்பதிகள் தாங்கள் தனி வீட்டில் விற்கிறோம் என்பதற்கு ஆதாரமாக கேஸ் சிலிண்டர் ரசீதைதான் காட்ட வேண்டியிருக்கிறது.. இந்த ரசீதை அப்லோடு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..
ஆனால், கேஸ் கனெக்ஷனே இல்லாத காரணத்தினால், புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்க முடியாத இக்கட்டான சூழலும் உருவாகியுள்ளது. 6 மாதங்களுக்கும் மேலாகவே ரசீதைப் பெற முடியாத நிலைமை நீடிக்கிறது.
ரேஷன் கார்டு
கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக புதிய சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை புதிய இணைப்புகளை வழங்க முடியாது என்றும் கேஸ் சிலிண்டர் ஏஜெண்ட்கள் சொல்கிறார்கள்.. இன்னொருபக்கம் கேஸ் இணைப்பு ரசீது இணைக்கப்படவில்லையென்றால் ரேஷன் கார்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தானாகவே நிராகரிக்கப்பட்டுவிடும் என்று சிவில் சப்ளை துறையினர் எச்சரிக்கிறார்கள்.
இதனால், தனிக்குடித்தனம் செல்லும் இளம் தம்பதிகளும், புதிதாகக் குடியேறியுள்ள குடும்பங்களும் கேஸ் கனெக்ஷனும் இலலாமல், ரேஷன் கார்டும் இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்களாம்.. எனவே கேஸ் & ரேஷன் கார்டு என இந்த 2 விவகாரத்திலும் அரசு உடனடியாக தலையிட்டு உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்..!!!


Click it and Unblock the Notifications
