எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கு ஏடிஎம் வந்தாச்சு.. இனி 2 நிமிஷத்துல சிலிண்டர்! மக்களுக்கு LPG ATM ஹேப்பி
சென்னை: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உலகையே உலுக்கி வரும் நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க "எல்பிஜி ஏடிஎம்" என்ற நவீன டெக்னாலஜி அதிரடியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது... இதுதான் தற்போது இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த ஏடிஎம் பற்றி சுருக்கமாக இங்கே தெரிந்து கொள்வோம்.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய போர் தாக்குதல் இப்போது 3வது வாரமாக நீடித்து வருகிறது.. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 110 டாலரை தாண்டியுள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும் பகுதி ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருவதால், போர் காரணமாக இந்தப் பாதையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இது இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விநியோகத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கேஸ் சிலிண்டர் 2 நிமிஷத்தில்
தற்போது நிலவும் இந்த நெருக்கடி காரணமாக, மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருகிறது. இதனால் வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து 10 நாட்களுக்கு மேலாகியும் சிலிண்டர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் சொல்லி தவித்து வரும் நிலையில், இந்த இக்கட்டான சூழலுக்கு தீர்வாக ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் நாட்டின் முதல் எல்பிஜி ஏடிஎம் இயந்திரத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
எல்பிஜி ஏடிஎம் இயந்திரம்
இந்த புதிய எல்பிஜி ஏடிஎம் இயந்திரம் முற்றிலும் ஆட்டோமெட்டிக்கானது.. அதாவது தானியங்கி மற்றும் தொடுதலில்லா முறையில் இயங்கக்கூடியது.
இது எப்படி செயல்படுகிறது தெரியுமா? வாடிக்கையாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் உள்நுழைந்து, ஓடிபி மூலம் சரிபார்த்து, கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் போதும். வெறும் 2 முதல் 3 நிமிடங்களில் காலி சிலிண்டரை உள்ளே வைத்துவிட்டு, எரிவாயு நிரப்பப்பட்ட புதிய சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம்.
15 கிலோ சிலிண்டர்
இந்த இயந்திரம் 24 மணி நேரமும் செயல்படும் என்பதால், இனி கேஸ் தீரும்போது நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த ஏடிஎம்மில் வழங்கப்படும் சிலிண்டர்கள் வழக்கமான இரும்பு சிலிண்டர்கள் கிடையாது.. இவை ஃபைபரால் செய்யப்பட்ட கலப்பு சிலிண்டர்கள் ஆகும். சாதாரண சிலிண்டர்கள் 31 கிலோ எடை கொண்டவை, ஆனால் இந்த புதிய ஃபைபர் சிலிண்டர்கள் வெறும் 15 கிலோ மட்டுமே எடை கொண்டவை. இவை துருப்பிடிக்காது மற்றும் சுகாதாரமானவை. மேலும், இந்த சிலிண்டர்கள் ஒளிபுகும் வடிவமைப்பில் இருப்பதால், உள்ளே இருக்கும் எரிவாயுவின் அளவை நாம் நேரடியாகவே பார்க்க முடியும்.
எடையைக் குறைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களே எளிதாக சிலிண்டரை எடுத்துச் சென்று மாற்றிக்கொள்ள முடியும் என பாரத் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்பிஜி ஏடிஎம்கள்
இந்த இயந்திரம் ஒரே நேரத்தில் 10 சிலிண்டர்களைச் சேமித்து வைக்கும் திறன் கொண்டது. கையிருப்பு குறையும்போது கேஸ் ஏஜென்சிக்குத் தானாகவே எச்சரிக்கை செய்யும் வசதியும் இதில் உள்ளது.
புதிதாக கேஸ் கனெக்ஷன் பெற விரும்புபவர்கள் கூட இந்த இயந்திரம் வாயிலாகவே விண்ணப்பிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. குருகிராமில் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னோடித் திட்டம் வெற்றி பெற்றால், விரைவில் தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பிற நகரங்களிலும் இந்த எல்பிஜி ஏடிஎம்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எரிவாயு விநியோகத்தை நவீனமயமாக்கும் இந்த முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது...!!












Click it and Unblock the Notifications