வீட்டு சிலிண்டர் விலை உயர்வு.. ஆட்டோ எல்பிஜி கேஸ் விலையும் உயர்வு.. கோட்டைக்கு பறந்த மேஜர் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் காய்கறி விலையுடன் சேர்த்து, கேஸ் சிலிண்டர் விலையும் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். இதனால், ஹோட்டல்களில் உணவு விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளது.. ஏற்கனவே வரத்து குறைவு என்பதாலும், காவிரி நீர் நமக்கு இல்லாமல் போனதாலும், காய்கறிகளின் வரவு பாதிக்கப்பட்டது. இதனால், அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தற்போது, கனமழை பெய்து வருவதால் வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே வருகிறது.. நேற்றுமுன்தினம், வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இப்போது கிலோ ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.. வெங்காயம் போலவே, தக்காளி, உருளைக்கிழங்கின் விலையும், ஒரேயடியாக உயர்ந்துவிட்டன.
சிலிண்டர் விலை: இனி வரும் நாட்களில் மழைப்பொழிவு அதிகமாகவே இருக்கும் என்பதால், அடுத்தடுத்த நாட்களிலும் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், கேஸ் சிலிண்டரின் விலையையும் மத்திய அரசு உயர்த்தி விட்டதால், ஹோட்டல்களில் உணவு விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வீட்டு சமையல் சிலிண்டர் மட்டுமல்லாமல், ஆட்டோ எல்பிஜி கேஸ் விலையும், கடந்த 3 மாதங்களில் ரூ.11 வரை உயர்ந்திருப்பது, வாடகை வாகன ஓட்டுனர்களை பெருத்த கவலையடைய செய்துள்ளது.
கேஸ் விலை உயர்வு: ஏற்கனவே, பெட்ரோலிய எரிபொருளுக்கு மாற்றாகத்தான், சுற்றுசூழலுக்கு உகந்த எல்.பி.ஜி. கேஸை பயன்படுத்தி, இயங்கும் வாகனங்கள் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது.. எரிபொருள் விலை உயர்வு காரணமாக பலரும் எல்பிஜி கேஸ் வாகனங்களுக்கு மாற தொடங்கியதுமே, பெட்ரோல், டீசல், சிலிண்டர், கேஸ் விலையுடன், ஆட்டோ எல்பிஜி கேஸ் விலையும் போட்டி போட்டுக்கொண்டு உயர்த்தப்பட்டு வருகிறது.
அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் ரூ.1.69 காசுகளும், அக்டோபர் மாதம் ரூ.6.11 காசுகளும், நவம்பர் 1ம் தேதி முதல் இப்போதுவரை ரூ.3.04 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
அரசு ஆப்: சுருக்கமாக சொல்லப்போனால், கடந்த 3 மாதங்களில் ரூ.11 வரை ஆட்டோ எல்பிஜி கேஸ் உயர்ந்துள்ளது.. கேஸ் ரூ.86க்கு விற்கப்படுவதால் வாடகை வாகன ஓட்டிகளும் பெருத்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். கேஸ் விலை இப்படியே நீடித்தால், வாகனங்களின் வாடகையை உயர்த்த வேண்டியதாகிவிடும் என்றும் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
இதற்கெல்லாம் தீர்வு ஏற்பட வேண்டுமானால், ஓலா, ஊபர் செயலிகளை போலவே, தமிழக அரசே, புது செயலி ஒன்றை உருவாக்கினால், பொதுமக்கள் உட்பட அனைவருக்குமே உபயோகமாக இருக்கும் என்றும் கோரிக்கையை விடுக்க துவங்கியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications