பழைய வீட்டை விற்றால்.. இனி மிகப்பெரிய நஷ்டம் வரும்.. மத்திய அரசின் புதிய வரி குறித்து விளக்கம்
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாய வரியை கணக்கிடுவதில் உள்ள குறியீட்டை நீக்கி உள்ளார். இந்த முடிவு நடுத்தர வர்க்கத்தினர் அனைவரையும் கடுமையாக பாதிக்கும் என்று கேரளா காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக நீண்ட பதிவினை வெளியிட்டு விளக்கமும் அளித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொத்துகள் மீதான நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான (LTCG) வரியை 12.5% ஆகக் குறைத்தார். ஆனால் மிகவும் புத்திசாலித்தனமாக குறியீட்டு முறை நீக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை கணக்கில் கொள்ளாமல் (indexation) வரி விதிப்பை அறிமுகப்படுத்தி உள்ளார். இது நம்மை எவ்வாறு பாதிக்கிறது? எளிய கணக்கின் மூலம் பார்ப்போம்.

நீங்கள் ஜனவரி 2009 இல் ₹50 லட்சத்திற்கு ஒரு அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று ₹1.5 கோடிக்கு விற்றுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். குறியீட்டு முறையின் படி, 15 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் செலுத்திய ₹50 லட்சம் இன்றைக்கு ₹1.32 கோடியாகக் கருதப்படுகிறது. எனவே, நிகர லாபம் அல்லது மூலதன ஆதாயம் ₹17.5 லட்சம் மட்டுமே. மேலும் 20% என்ற விகிதத்தில் மூலதன ஆதாய வரியாக ₹3.5 லட்சம் மட்டுமே செலுத்த வேண்டும். உங்களுக்கு 14 லட்சம் லாபம் கிடைக்கும்.
ஆனால் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி குறியீட்டு முறை (indexation) இல்லாமல் இப்போது உங்கள் மூலதன ஆதாயம் ₹1 கோடியாகும், மேலும் 12.5% இல், நீங்கள் வரியாக ₹12.5 லட்சம் செலுத்துவீர்கள். முக்கியமாக, அரசு பழைய முறையை விட புதிய முறையில் ₹9 லட்சம் அதிகமாக வாங்கும். ஒரு சொத்தை வாங்கி 15 வருடங்கள் வைத்திருந்த பிறகு உங்கள் நிகர லாபம் வெறும் ₹5,01,825 மட்டுமே கிடைக்கும். அதாவது கடந்த முறையைவிட உங்களுக்கு கிட்டத்தட்ட 9 லட்சம் இழப்பு ஏற்படும்.

அதேபோல் இன்னாரு உதாரணத்தை பார்ப்போம் நீங்கள் ஜனவரி மாதம் 2018 இல் ₹80 லட்சத்திற்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தனிப்பட்ட அவசரத்தின் காரணமாக இன்று ₹95 லட்சத்துக்கு விற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.இப்போது நிலைமை கடினமாகிறது. குறியீட்டு முறை காரணமாக , நீங்கள் உண்மையில் ₹11.76 லட்சம் நஷ்டம் அடைவீர்கள். அத்துடன் LTCG வரி என்பது பூஜியம் என்றே செலுத்தியிருப்பீர்கள்.
ஆனால் புதிய முறையில், உங்கள் காயத்தை மேலும் அதிகப்படுத்தி விடும். உங்களிடமிருந்து ₹1.87 லட்சத்தை எல்டிசிஜியாக எடுத்துக் கொள்வார். இதனால் உங்களுக்கு நிகர இழப்பு ₹13.63 லட்சமாகிவிடும்.. மீண்டும் நீங்கள் கடன் வட்டிக்கு மட்டும் பல லட்சங்கள் அதிகமாக செலவழிக்க வேண்டியது வரும்.
நீண்ட கால மூலதன ஆதாய வரிமுறையில் குறியீட்டை அகற்றுவது அதன் முழு நோக்கத்தையும் வீணாக்கிவிடுகிறது. இது அனைவரையும் பாதிக்கிறது மற்றும் அதிகமான மக்கள் தங்கள் பரிவர்த்தனைகளை குறைத்து மதிப்பிடுவதற்குத் தள்ளிவிடும். கறுப்புப் பணத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும். இந்த முறை இது ரியல் எஸ்டேட் முதலீடுகளை கடுமையாக பாதிக்கும். நமது கட்டுமானத் துறையை இன்னும் பெரிய நெருக்கடிக்குள் தள்ளக்கூடும்." இவ்வாறு கேரளா காங்கிரஸ் பதிவில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications