கீவ் நகரத்தில் விழுந்த குண்டு... கீரைக்காரி கூடை உடைக்கும்.. கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை
சென்னை: ‛‛கீவ் நகரத்தில் விழுந்த குண்டு, கீரிப்பட்டியின் கீரைக்காரி கூடை உடைக்கும்'' என உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டித்து பாடலாசிரியர் வைரமுத்து எழுதியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று போர் தொடுக்க துவங்கியது. உக்ரைன் தலைநகர் கிவ், கார்னவ் உள்பட பல நகரங்களில் வான்வழி தாக்குதலை நடத்தியது. 2வது நாளான நேற்று கிவ் நகரை நோக்கி ரஷ்யா படைகள் முன்னேறி வருகின்றன. மேலும் தரைவழி, வான்வழி, கடல்வழி தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது.
இதனால் உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தப்படுகின்றன. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேறி வருகின்றனர்.

பின்வாங்காத ரஷ்யா
ரஷ்யாவின் போர் நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் கண்டித்துள்ளன. போரை நிறுத்தி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். ஆனால் ரஷ்யா போர் நடவடிக்கையில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை. இதனால் உக்ரைன் மக்கள் பெரும் உயிர் பாதுகாப்பை தேடி வருகின்றனர்.

வைரமுத்துவின் கவிதை
இந்நிலையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது உக்ரைன் மீதான ரஷ்யா போரை கண்டித்து ஒரு கவிதை எழுதியுள்ளார். இந்த கவிதையை இன்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த கவிதை மூலம் போர் வேண்டாம், பொருளாதார தடை வேண்டாம் என தனது கருத்தை கூறியுள்ளார்.

கீரைக்காரி கூடை உடைக்கும்
இதுதொடர்பாக அவர் பதிவிட்ட கவிதையில், ‛‛நான் போரை வெறுக்கிறேன். அது உலகத்தின் விலா எலும்புகளையும் பாதிக்கும். கீவ் நகரத்தில் விழுந்த குண்டு கீரிப்பட்டியின் கீரைக்காரி கூடை உடைக்கும். ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும். ரஷ்யா மீது ஜி7 நாடுகளின் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். நான் போரை வெறுக்கிறேன்'' என வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்பு
இந்த கவிதையை ரஷ்யாஉக்ரைன் எனும் ஹேஷ்க்டேக்கில் அவர் பதிவிட்டிருந்தார். வைரமுத்துவின் இந்த கவிதையை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர். மேலும் உக்ரைன்-ரஷ்யா தொடர்பாக அவர்கள் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வைரமுத்துவின் கவிதைக்கு ‛லைக்' செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications