ஐடி ரெய்டு.. என்ன மிரட்ட பார்க்கிறீர்களா? பயந்து காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல.. ஸ்டாலின் பதிலடி!
சென்னை: ஐடி ரெய்டு போன்ற மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவினர் நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து ஐடி ரெய்டு நடந்து வருகிறது. கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. அதோடு அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும் சோதனை நடக்கிறது.
இன்னொரு பக்கம் சென்னையில் உள்ள ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

அதிருப்தி
சபரீசனுக்கு சொந்தமான 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திமுகவினர் மத்தியில் இந்த ரெய்டு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. திட்டமிட்டு தேர்தல் நேரத்தில் இப்படி ரெய்டு நடக்கிறது.. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று திமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

ஸ்டாலின்
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ரெய்டு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், மக்களிடம் ஆதரவில்லை; படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல! இதற்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்.

அச்சமில்லை
அச்சமில்லை! துணிந்து எதிர்ப்போம்! உங்கள் தப்புக்கணக்குக்கான தெளிவான பதிலை மக்களே ஏப்.6-இல் வழங்குவர். தோல்வி பயத்தில் பாஜக இப்படி சோதனைகளை செய்து வருகிறார்கள்.

மிசா
மிசாவையே பார்த்த நான் வருமான வரித்துறை சோதனைக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன். அதிமுகவை நீங்கள் மிரட்டிவிட்டீர்கள். எங்களை நீங்கள் மிரட்ட முடியாது. நாங்கள் 50 வருடங்களில் அனைத்தையும் பார்த்துவிட்டோம், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் .












Click it and Unblock the Notifications