விஜய் பிரசாரத்துக்கு கட்டுப்பாடு.. மதுராந்தகத்தில் நாளை 5000 பேருக்கு மட்டும் அனுமதி! தவெக அறிவிப்பு
சென்னை: மதுராந்தம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக முதல்வர் விஜய் நாளை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த பிரசாரத்திற்கு க்யூஆர் கோட் உடன் கூடிய நுழைவு சீட்டு வழங்கப்பட்டுள்ள 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், மற்றவர்கள் யாரும் வரவேண்டாம் என்றும் கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றம் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (25.09.2026, வெள்ளிக்கிழமை), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.'' என்று கூறப்பட்டுள்ளது.
மதுராந்தம் சட்டசபை தொகுதி என்பது செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மரகதம் குமாரவேல் என்பவர் வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இதனால் காலியான மதுராந்தம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமாரவேல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் சார்பில் ஜானகி ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர். இவர்கள் உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தவெக ஆட்சி நடந்தாலும் கூட அந்த கட்சிக்கு தனி மெஜாரிட்டி இல்லை. காங்கிரஸ், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவில் தான் தவெக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இதனால் எம்எல்ஏக்களின் பலத்தை அதிகரிக்க தவெகவிற்கு இந்த தேர்தலில் வெல்வது முக்கியம்.
அதுமட்டுமின்றி தற்போது நடக்கும் தவெக அரசுக்கான மதிப்பெண்ணாகவும் இந்த தேர்தல் முடிவு இருக்கும் என்பதால் தவெக வெல்ல அதிக முனைப்பு காட்டி வருகிறது. இப்படியான சூழலில் தான் மதுராந்தம் இடைத்தேர்தலுக்காக முதல் முறையாக நாளை முதல்வர் விஜய் தனது கட்சி வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
