டாஸ்மாக் வழக்கில் ட்விஸ்ட்.. அமலாக்கத்துறையின் சோதனை சட்டவிரோதமானது அல்ல! உயர்நீதிமன்றம் அதிரடி!
சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையை சட்ட விரோதம் என அறிவிக்க கோரி டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சோதனை அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.
இந்த நிலையில், நிர்ணயத்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார் கூறப்பட்டது.

இதனையடுத்து அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை , ஆகிய பகுதிகளில் சோதனை 8ஆம் தேதி வரை நீடித்தது. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் டாஸ்மாக், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சொந்தமான அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான நிறுவனம் அக்கார்டு ஹோட்டல், ஆயிரம் விளக்கு உள்ள எஸ்என்ஜெ டிஸ்டிலரீஸ், டி நகரில் உள்ள கால்ஸ் மதுபானம், சிவா டிஸ்டிலரீஸ், மயிலாப்பூர் ஆர் கே சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபானம் நிறுவனம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை வரை சோதனை நடைபெற்ற நிலையில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்க துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது டாஸ்மாக் சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் ஆகியோர் வாதிட்டனர். அமலாக்கத் துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை எனவும் வெளிப்படையாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் அமலாக்கத்துறை ஒளிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கருதுகிறது? எதற்காக சோதனை செய்கிறோம் என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினர். அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2007ம் ஆண்டு முதல் 2021 வரை ஆண்டு முறைகேடு கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்தது போல விசாரணை நடத்துவது ஏன் எனவும் அரசுத்தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இன்றைக்கு டாஸ்மாக் குறிவைக்கப்படுகிறது. நாளை ஒவ்வொரு துறையும் குறிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகளை அடைத்து வைத்து நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பியது சரியான நடத்தையா? எனவும் அரசுத் தரப்பில் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ததாகவும், முறைகேடு நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத் துறை விசாரணை நடத்தலாம் எனவும் கூறினார்.
டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளதாகவும், சிலர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தியதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கில் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ்சிங் கடந்த 21ஆம் தேதி பதில் வாதம் செய்தார்.. அமலாக்கத் துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை என்றும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை எவ்வாறு சொல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களை முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என கூறி இருந்தனர்.
இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது அல்ல என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் சோதனை அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications