அரசு புறம்போக்கு நிலத்தை.. தனது பெயரில் பத்திரப்பதிவு செய்த விஜய்.. நீதிபதி கேட்ட முக்கிய கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதல்வர் விஜய்யின் வெற்றியை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தேர்தல் வழக்கின் விசாரணை சூடுபிடித்துள்ளது. இந்த மனுவை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் விசாரித்து வருகிறார்.

vijay tvk

வழக்குப் பின்னணி என்ன?

பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளரான எஸ். தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தேர்தல் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், முதல்வர் விஜய் தனது 2026 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அசையாச் சொத்துக்கள் தொடர்பான விவரங்களை வேண்டுமென்றே மறைத்துள்ளார் என்றும், தவறான தகவல்களைத் தந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினார். இதனால் அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ஆர். சண்முகநாதன் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள்:

1. கொடைக்கானல் வில்பட்டி நிலம்: கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் உள்ள 50 சென்ட் விவசாய நிலத்தை 1997-ஆம் ஆண்டு ரூ.30,000-க்கு வாங்கியதாகவும், இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கிராமத்தின் 'ஏ' பதிவேட்டை (A Register) ஆய்வு செய்தபோது, அந்த சர்வே எண் அரசு புறம்போக்கு நிலம் எனத் தெரியவந்துள்ளதாக வழக்கறிஞர் வாதிட்டார்.

2. சென்னை போரூர் நிலம்: போரூரில் 33,955 சதுர அடி விவசாயம் அல்லாத நிலத்தை 2010-ல் ரூ.9.13 கோடிக்கு வாங்கியதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பதிவுத் துறை ஆவணங்களின்படி 20,773 சதுர அடி நிலம் மட்டுமே ரூ.7.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது; கூடுதல் அளவு மற்றும் கூடுதல் தொகை காட்டியதற்கு எந்த விளக்கமும் இல்லை என குற்றம் சாட்டப்பட்டது.

3. பாடி வணிக வளாகக் கட்டிடம்: சென்னை பாடியில் உள்ள 11,854 சதுர அடி வணிகக் கட்டிடம் ரூ.7 கோடி மதிப்புடையது என்றும், அதனை 2009-ல் ரூ.1.95 கோடிக்கு வாங்கி, ரூ.3.9 கோடி கட்டுமானச் செலவு செய்ததாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 23,460 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்தக் கட்டிடத்தை 2026 பிப்ரவரி 12 அன்றே ரூ.35 கோடிக்கு விற்றுவிட்டதாக மனுதாரர் கூறினார். மேலும் இந்த இடம் வீட்டு வசதி வாரிய நில பரிமாற்றம் மூலம் பெறப்பட்டது என்ற விவரமும் மறைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

4. நீலாங்கரை பங்களா: நீலாங்கரை பங்களா பரம்பரைச் சொத்து எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இதனை அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் 2003-ல் வாங்கி, 2005-ல் அன்பின் அடிப்படையில் செட்டில்மென்ட் பத்திரமாக மகனுக்குக் கொடுத்துள்ளார். எனவே இது பரம்பரைச் சொத்து அல்ல என்றும், பிரமாணப் பத்திரத்தில் கட்டுமானச் செலவு மற்றும் தற்போதைய மதிப்பு ரூ.20 கோடி என மாறுபட்டு காட்டப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றத்தில் நீதிபதி எழுப்பிய கேள்விகள்

இந்த வாதங்களின் போது, கொடைக்கானல் வில்பட்டி நிலம் தொடர்பாக 1997-ல் கிரயம் வாங்கியதற்கான அசல் ஆவணங்களை முதல்வர் விஜய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக நீதிபதி லட்சுமிநாராயணன் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த மனுதாரர் வழக்கறிஞர், அரசு ஆவணமான கிராம 'ஏ' பதிவேட்டின்படி அது அரசு புறம்போக்கு நிலம் என வாதிட்டார்.

அப்போது நீதிபதி, "ஒரு தேர்தல் தீர்ப்பாயமாக இருக்கும் இந்த நீதிமன்றம், ஒரு சொத்தின் உரிமையைமுடிவு செய்ய முடியுமா?" என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பு, "தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத் தன்மையை தேர்தல் தீர்ப்பாயம் ஆராய முழு அதிகாரம் உண்டு" என்று பதில் அளித்தது.

மேலும் விசாரணையின் போது, ரூ.600 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வெளிப்படையாக அறிவித்துள்ள ஒரு வேட்பாளர், சில சொத்துக்களின் மதிப்பில் அல்லது விவரங்களில் மாறுபாடு காட்டியிருந்தால், அது எப்படி வாக்காளர்களைத் தவறாக வழிநடத்தியதாகவோ அல்லது ஊழல் நடைமுறையாகவோ கருத முடியும் எனவும் நீதிபதி வினவினார்.

முதல்வர் விஜய் தரப்பு வாதம்

இந்த மனுவை விசாரணைக்கே எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்யக் கோரி முதல்வர் விஜய் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி வாதிட்டார்:

மனுதாரரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை, கற்பனையானவை மற்றும் வெறும் யூகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. படிவம் 26-ல் உள்ள சொத்துக்களின் மதிப்பில் ஏற்படும் சிறிய ஏற்ற இறக்கங்களை பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து மனுதாரர் குற்றம் சாட்டுகிறார். இவை எதுவுமே வழக்கைத் தொடர்வதற்கான முகாந்திரத்தை உருவாக்கவில்லை.

ஒரு பிரபலமான சினிமா நடிகராகவும், நேர்மையான மாற்று அரசியலை முன்வைத்த தலைவராகவும் மக்கள் விஜய்க்கு வாக்களித்தார்கள். அவர் மாநிலம் முழுவதும் சொத்துக்கள் வைத்துள்ளார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு சொத்தின் மதிப்பு சிறிது கூடியதாலோ குறைந்ததாலோ எந்த ஒரு வாக்காளரும் தனது முடிவை மாற்றியிருக்க மாட்டார்கள்.

ரூ.600 கோடிக்கு அதிகமான சொத்துக்கள், வருமான வரி விவரங்கள் யாவும் முறையாகக் காட்டப்பட்டுள்ளன. சொத்துக்களை முழுமையாக மறைக்கவோ அல்லது வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் சேர்க்கவோ இல்லை; எனவே நிலத்தின் அளவு, விற்பனைத் தொகை அல்லது வாங்கிய முறை ஆகியவற்றில் கூறப்படும் சிறிய தொழில்நுட்ப மாறுபாடுகள் தேர்தலை செல்லாது என அறிவிக்கப் போதுமானவை அல்ல.

பெரம்பூர் தொகுதியில் விஜய் 1,20,365 வாக்குகள் பெற்று, 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். எந்த ஒரு வாக்காளரின் உரிமையிலும் யாரும் தலையிடாத நிலையில், ஊழல் குற்றச்சாட்டு என்ற வாதத்திற்கே இடமில்லை.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லட்சுமிநாராயணன், வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விரிவான விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+