வெற்றிமாறன் & கோவுக்கு பலத்த அடி! அத்தனையும் ஆபாசம்.. அதிரடியாக ஆர்டர் போட்ட ஹைகோர்ட்! என்னாச்சு?
மதுரை: இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ' பேட் கேர்ள்' படத்தின் டீசரில் சிறுவர், சிறுமிகள் ஆபாசமாக இருப்பது, புகை, மது பயன்படுத்துவது போன்ற ஆபாசமான காட்சிகள் உள்ளதாகவும், பேட் கேர்ள் படத்தின் டீசரை யூட்யூபில் இருந்து நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில், பேட் கேர்ள் படத்தின் டீசரை சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளத்திலிருந்து நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அனுராக் காஷ்யப், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம், பேட் கேர்ள் என்ற படத்தை தயாரித்துள்ளனர். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வர்ஷா பாரத் இப்படத்தை இயக்கியுள்ளார்.
அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் டீசரை வெளியிட்டனர்.

பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் பருவ பெண்ணின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், முதல் காதல், முதல் முத்தம் என இளமை கனவுகளையும் பெற்றோரின் கட்டுப்பாடு அவர்களை விட்டு பிரிந்து தனியாக வாழும் வாழ்க்கை, அவளது காதல் தேர்வுகள் என ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை குறித்து விவரிப்பதாக படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என படம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், படத்தில் பிராமண சமுதாயத்தை சேர்ந்த பெண்ணாக அவர் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சிறுவர், சிறுமிகள் ஆபாசமாக இருப்பது போன்ற ஆபாசமான காட்சிகள் உள்ளதாக பேட் கேர்ள் படத்தின் டீசரை யூட்யூபில் இருந்து நீக்க கோரி வழக்குத் தொடரப்பட்டது. மதுரை வெங்கடேஷ் , ரமேஷ் குமார் ராம்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில்," 26.01.2025 ,அன்று யூடியூப் இணையத்தில் பேட் கேர்ள் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது.இந்த டீசரில் சிறுவர், சிறுமி ஆபாசமாக இருப்பது போன்ற ஆபாசமான காட்சிகள் உள்ளன. இந்த டீசர் தற்போதும் ஆன் லைனில் உள்ளது.
இது போன்ற காட்சிகள் குழந்தை ஆபாசம் மற்றும் குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகும். இது பாலியல் குற்றமாகும். எனவே இந்த ஆபாசமான டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும். மேலும் சிறுவர் சிறுமியர் பாலியல் காட்சிகளை வெளியிட்ட கூகுள் நிறுவனம் பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே பல்வேறு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கின் நீதிபதி உத்தரவை பிறப்பித்திருக்கிறார். அதில்," சிறுமிகள் ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகளை வைத்துள்ள பேட் கேர்ள் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து ஒரு மாதத்தில் நீக்க நடவடிக்கை வேண்டும். இனி வரும் காலங்களில் இது போன்ற ஆபாச காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆபாச காட்சிகளை பதிவேற்றம் செய்தது, இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மனுதாரர் உரிய அமைப்புகளிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரலாம்" என கூறியுள்ளார். பேட் கேர்ள் படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்ட நிலையில் தற்போது அதனை நீக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளதால், படத்தின் தயாரிப்பாளரான வெற்றிமாறன் உள்ளிட்ட பட குழுவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
