நடிகர் மன்சூர் அலிகான் மீதான வழக்கு ரத்து.. சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சையான கருத்தைத் தெரிவித்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறையாக விசாரிக்கப்படாமல் தொடரப்பட்ட வழக்கு என நடிகர் மன்சூர் அலிகான் முறையிட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்.
நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாரடைப்பு காரணமாக சுயநினைவின்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே கொரோனாவிற்கு எதிரான, தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

எனவே இதன் காரணமாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம், என்று சில வதந்திகள் பரவி வந்தன. அப்போது நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசி தொடர்பாக சில உண்மைக்குப் புறம்பான கருத்துகளை தெரிவித்து இருந்தார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதாக கூறி, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல், தவறான கருத்துகளைப் பொதுமக்களிடையே பரப்புவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முறையாக விசாரிக்காமல் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், தன் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் நடிகர் மன்சூர் அலிகான்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மன்சூர் அலிகானின் முறையீட்டை ஏற்று, அவர் மீதான வழக்கை ரத்து உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
