தமிழகத்தில் பிறந்த எனக்கு இந்திய குடியுரிமை வேண்டும்! இலங்கை பெற்றோருக்கு பிறந்த கோவை பெண் மனு
சென்னை: 1984ம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து இந்தியா வந்த பெற்றோருக்கு பிறந்த தனக்கு, இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரிய பெண் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையை சேர்ந்த ரம்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1984 ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் ஏற்பட்ட போது, அங்கிருந்து தன் பெற்றோர் விசா பெறாமல் இந்தியா வந்து, அவ்வப்போது சென்னை சாஸ்திரி பவனில் அனுமதி பெற்று 2019 ம் ஆண்டு வரை தங்கி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில், வெளிநாட்டினருக்கான மண்டல அலுவலகத்தில் ஆன் லைன் மூலம் அனுமதி பெற முயற்சித்த போது விசா இல்லாமல் வெளிநாட்டினர் தங்க அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், தன் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும்படி வெளிநாட்டவருக்கான மண்டல அலுவலகம் உத்தரவிட்டது.
இலங்கைக்கு சென்று அங்கு பாஸ்போர்ட் பெற்று பின் இந்தியாவிற்கு திரும்பி வந்து இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்க அறிவுறுத்தியதாக தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் பிறந்து, பிறப்பு சான்றிதழ் பெற்று, கோவையில் பள்ளி - கல்லூரி படிப்பை முடித்து, இங்கேயே திருமணம் செய்திருக்கும் தனக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளமுகில் ஆஜராகி, மனுதாரரின் பெற்றோர் இந்தியாவில் இருந்து சென்று மலையக தமிழர்கள், யுத்தகாலத்தில் மீண்டும் இந்தியா வந்த அவர்களுக்கு மனுதாரர் கடந்த 1987 ம் ஆண்டு பிறந்தார். தொடர்ந்து தற்போது வரை அவர்கள் கோவையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் ரபு மனோகர் ஆஜராகி, இது தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் கோரினார்.
இதனை ஏற்ற நீதிபதி, மத்திய அரசின் உள்துறை, வெளியுறவு துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 17 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications