அரசியல்வாதிகளின் கருத்துகளை புறக்கணிக்கணும்! அண்ணாமலை குறித்த வழக்கில்.. சென்னை ஐகோர்ட் கருத்து
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் தன்னிடம் சில ஆதாரங்கள் இருப்பதாகக் கூறிய பாஜகவின் அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை ஐகோர்ட் அரசியல்வாதிகளின் இதுபோன்ற கருத்துகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான எம்.எல்.ரவி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
அந்த மனுவில் மேலும், இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் 2024 டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் யாருடன் தொலைப்பேசியில் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக ரவி குறிப்பிட்டுள்ளார்.
ரவி மேலும் தனது மனுவில், "உயர் நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, ஞானசேகரன் வழக்கு குறித்து எந்தப் பாரபட்சமும் இல்லாமல் விசாரணை நடத்த ஏதுவாக அண்ணாமலையிடமும் விசாரணை நடத்த வேண்டும் எனக் காவல்துறை இயக்குநரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தச் சூழலில், ஞானசேகரன் வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட ஜூன் 2ஆம் தேதிக்கு மறுநாள், அதாவது ஜூன் 3-ஆம் தேதி, குற்றவாளி ஞானசேகரனுடன் காவல்துறை அதிகாரி தொலைப்பேசியில் பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலையிடம் விசாரணை நடத்தணும்
எனவே, இந்த வழக்கில் மறைக்கப்பட்டதாக அண்ணாமலை குறிப்பிட்ட அந்த "சார்" யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறை இயக்குநரிடம் மீண்டும் மனு அளித்தோம்.. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், குற்றத்தின் தன்மையை அறிந்தும் ஆதாரங்களை அண்ணாமலை வெளியிடவில்லை என்றும், ஆதாரங்களை மறைத்ததற்காகவோ அல்லது பொதுமக்களுக்குத் தவறான தகவல்களைக் கூறி தவறாக வழிநடத்தியதற்காகவோ அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ரவி வலியுறுத்தினார்.
வாதம்
தவறான தகவலை அண்ணாமலை வெளியிட்டிருந்தால், அதற்காகச் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அவர் யார் யாரிடம் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி அனைத்து ஆதாரங்களையும் பெற்று விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.
உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
இருப்பினும், நீதிபதி வேல்முருகன் இதை ஏற்க மறுத்துவிட்டார். அவர் மேலும், "நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன. அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டுமா" என்றும் கேள்வி எழுப்பினார். அவர் மேலும், "இதுபோல வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டுமானால் தினமும் நூறு வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டி இருக்கும், இதற்காக நேரத்தை வீணடிக்க முடியாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது போன்ற அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களைப் புறக்கணிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, ஞானசேகரனுக்கு எதிரான வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவால் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ள நிலையில், மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications