நடிகர் விஜய்யின் தவெக கொடிக்கு தடையில்லை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கு தடையில்லை என கூறிய சென்னை உயர்நீதிமன்றம், தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தவெக கொடியால் தங்களுக்கு எப்படி இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து மனுதாரர் விளக்கவில்லை என்பதால் அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவில் மனுதாரர் கூறுகையில், எங்கள் வணிகச் சின்னமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியைப் பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் விசாரணையின் போது, "வணிகச் சின்னமாகப் பதியப்பட்ட தங்கள் சபை கொடியைப் பயன்படுத்துவது வணிகச் சின்னச் சட்டத்தையும், பதிப்புரிமைச் சட்டத்தையும் மீறிய செயல். கொடி ஓரளவு ஒற்றுமையாக இருப்பதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்பதால் சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியைப் பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க வேண்டும்" என மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
மனுதாரர் சபையோ, தவெகவோ எந்த வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை என்பதால் கொடி மீது உரிமை முடியாது எனவும் மனுதாரர் கொடியை ஒப்பிடும் போது தவெக கொடி முற்றிலும் வேறுபாடானது. எங்கள் கொடியில் மஞ்சள் கலரில் யானைகள், வாகை மலர்கள், 28 நட்சத்திரங்கள் உள்ளன என்பதால் மக்களிடம் எந்த குழப்பமும் இல்லை. இவ்வாறு தவெக சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
தவெக கொடியால் எப்படி இழப்பு ஏற்பட்டது என்பதை மனுதாரர் விளக்கவில்லை என்பதால் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரு கொடியையும் ஒப்பிடும் போது மனுதாரர் சபை கொடியைத் தவெக பயன்படுத்தியுள்ளது என கூற முடியாது. தவெக கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் என கூற முடியாது. சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தவெகவுக்குத் தடைவிதிக்க முடியாது என தெரிவித்து, இடைக்கால தடை கோரிய தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications