சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 15 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். 5 பேரை நிரந்தர நீதிபதிகளாகவும், 10 பேரை கூடுதல் நீதிபதிகளாகவும் நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க கடந்த சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் பரிந்துரை செய்தது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த கே.கோவிந்தராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர்களாகப் பணியாற்றிய ரஜினீஷ் பதியால் மற்றும் என்.ரமேஷ், மாநில அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய ஜி.கே.முத்துக்குமார், மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த வழக்கறிஞர் ஆர்.ராஜேஷ் விவேகானந்தன், புதுச்சேரி மாநில அரசு வழக்கறிஞராகப் பதவி வகித்த எஸ்.ரவீக்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றும் என்.திலீப்குமார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இ.மனோகரன் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர்களாகப் பணியாற்றிய ஆர்.அனிதா, கே.அப்பாதுரை ஆகிய 10 பேரை நீதிபதிகளாக நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆண்டு பரிந்துரை செய்திருந்தது.
அதேபோல, மாவட்ட முதன்மை நீதிபதிகள் அந்தஸ்தில் பணியாற்றி வரும் பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைப் பதிவாளராக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி, மாவட்ட முதன்மை நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் சி.திருமகள், டி.லிங்கேஸ்வரன், கே.பாலதண்டாயுதம் ஆகிய 9 பேரையும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.
இதனை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், அவர்களை நீதிபதிகளாக நியமிக்க மத்திய சட்டத்துறைக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய சட்டத்துறை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என 19 பேரின் பெயர் பட்டியலை அனுப்பியது. அந்த பட்டியலில் 15 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இவர்களில், வழக்கறிஞர்களாக இருந்த என். ரமேஷ், ஜி.கே. முத்துக்குமார், ஆர்.ஆர். விவேகானந்தன், எஸ். ரவிக்குமார், என். திலீப்குமார், எ. மனோகரன், கே. கோவிந்தராஜன், ரஜ்னீஷ் பதியில் ஆகிய 8 பேரும், மாவட்ட நீதிபதிகளாக இருந்த பி. முருகன், எம்.டி. சுமதி, எஸ். அல்லி, சி. திருமகள் சந்திரசேகர், எஸ். கார்த்திகேயன், பி. முருகேசன், என். குணசேகரன் ஆகிய 7 பேரும் என மொத்தம் 15 பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். இந்த 15 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி விரைவில் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்து, காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைப்படி காலியாக உள்ள 9 சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான பணியிடங்கள் விரைவில் நிரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நியமன பட்டியலில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராகவும் பொறுப்பில் இருந்த எஸ். அல்லி, கடந்த மாதம் தான் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே அவரது பெயர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பட்டியலில் இடம் பெற்றதால், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பின் படி இன்னும் இரண்டு ஆண்டுகள், அதாவது 2028 வரை நீதிபதியாக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
