பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என அனைத்து முதன்மை அமர்வு நீதிமன்றங்களுக்கும், மகளிர் சிறப்பு நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குழந்தையிடம் 30 நாளில் வாக்குமூலம் பதிவு செய்து ஓராண்டில் போக்சோ வழக்கு விசாரணையை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவை சேர்ந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் சுந்தர், சுரேஷ் ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரியும், போக்சோ மற்றும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க உத்தரவிடக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என அனைத்து முதன்மை அமர்வு நீதிமன்றங்களுக்கும், மகளிர் சிறப்பு நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டனர்.
மேலும், "பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையே வேட்டைக்காரர்களாக மாறும் நிகழ்வுகள் தமிழகத்தில் மீண்டும் நடைபெறவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். காவல்துறை அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க, இரவு ரோந்து பணிகளை ஆண்டுதோறும் மறு ஆய்வு செய்ய வேண்டும்" என தமிழக டிஜிபி-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தொடர்ந்து, "பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை தேவையில்லாமல் தள்ளிவைக்க கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும், சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்" என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல, போக்சோ வழக்குகளில், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட 30 நாட்களில் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் வாக்குமூலம் பதிவு செய்து, ஓராண்டில் விசாரணையை முடிக்க வேண்டும் என போக்சோ சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் என மாநில நீதித்துறை பயிற்சியகத்துக்கு உத்தரவிட்டனர்.
மேலும், போக்சோ வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும் என டிஜிபி-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கடலூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தூத்துக்குடியில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிகளை விரைந்து நிரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், மாநிலம் முழுவதும் 6 புதிய சிறப்பு நீதிமன்றங்களை துவங்குவது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும். அதன் முன்னேற்றம் குறித்து இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைப் பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
