பெருந்துறை தேர்தல் வழக்கு தள்ளுபடி.. தோப்பு வெங்கடாசலத்தின் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம்!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்த எஸ். ஜெயகுமாரின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தி.மு.க வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் (என்.டி. வெங்கடாசலம்) தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 தொகுதிகளில் பெருந்துறையும் ஒன்று என்பதால், இந்தத் தீர்ப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
வழக்கின் பின்னணி என்ன?
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் எஸ். ஜெயகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இவரது வெற்றியை எதிர்த்தும், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரியும், அந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தோப்பு வெங்கடாசலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 84-ன் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட சூழல்
தமிழகத்தில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் இந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
சட்டப்படி ஒரு தொகுதி காலியானால் 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 151-A). ஆனால், இந்த ஐந்து தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து, தோற்ற வேட்பாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், "தங்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்" என்றும் அவர்கள் கோரியிருந்தனர்.
இது தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த கே. வெங்கடாசலபதி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை தலைமை நீதிபதி சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தாக்கல் செய்த பதில் மனுவில் முக்கிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை (1967 சஞ்சீவய்யா வழக்கு மற்றும் 2010 தெலங்கானா ராஷ்டிர சமிதி வழக்கு) சுட்டிக்காட்டிய தேர்தல் ஆணையம், "ஒரு தொகுதியில் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு நிலுவையில் இருக்கும்போதும், மனுதாரரே தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரும்போதும், இடைத்தேர்தல் நடத்தினால் ஒரே பதவிக்கு இரண்டு பேர் உரிமை கோரும் சிக்கல் உருவாகும்" என விளக்கியது. இதன் காரணமாக, நீதிமன்றத்தில் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை ஏற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடையையும் நீட்டித்திருந்தது.
இன்றைய தீர்ப்பின் தாக்கம்
இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ஐந்து தொகுதிகளில், முதலாவதாக பெருந்துறை தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. தோப்பு வெங்கடாசலத்தின் மனுவை நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முழுமையாக நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளார்.
பெருந்துறை தொகுதிக்கான வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதால், அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு சட்டரீதியாக இருந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது. இதனால் பெருந்துறை தொகுதிக்கு தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
