கோவில் திருவிழா உரிமை.. எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது.. சென்னை ஐகோர்ட் திட்டவட்டம்
சென்னை: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த ஜமீன் இளம்பிள்ளை என்னுமிடத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவில் மாசி திருவிழா நடத்தக் கோரி பாரத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தங்கள் தலைமையில் தான் கோவில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த ஜமீன் இளம்பிள்ளை என்னுமிடத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவில் மாசி திருவிழா நடத்தக் கோரி பாரத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட சாதியினர், தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவதால், அறநிலையத் துறை தரப்பில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும், இந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாததால் அறநிலையத் துறையே விழாவை நடத்தும் என முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அமைதிப் பேச்சு நடத்தப்பட்டு திருவிழா நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாதி என்பது மதமல்ல என ஏற்கனவே உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, திருவிழாவில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது. அதை மற்ற பிரிவினர் தடுக்க கூடாது எனக் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் அமைதிப் பேச்சு நடத்த வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்த நீதிபதி, அறநிலையத் துறை அதிகாரிகள் திருவிழாவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
கடவுள் முன் எந்த பாகுபாடும் இருக்க கூடாது. எந்த பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்காமல் திருவிழாவை நடத்த வேண்டும். தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
நாமக்கல் மாரியம்மன் கோவில்: கடந்த வார வழக்கிலும் அதிரடி உத்தரவு
முன்னதாக நாமக்கல்லில் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த மாரியம்மன், அங்காளம்மன் மற்றும் பொன் காளியம்மன் கோவில்களில் இருந்து, பொன் காளியம்மன் கோவிலை தனியாக பிரிக்க வேண்டும் என்று கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், பொன் காளியம்மன் கோவிலை தங்கள் சாதியை சேர்ந்தவர்கள் நிர்வகிக்கிறார்கள் என்றும், மற்ற கோவில்களை வேறு சாதியினர் நிர்வகிக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சாதியை நிலைநிறுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்று கொள்ள முடியாது என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அவர் தனது உத்தரவில், கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானது. அனைத்து பக்தர்களும் கோவிலை நிர்வகிக்கலாம், வழிபடலாம் எனத் தெரிவித்துள்ளார்.
சாதி என்பது மத பிரிவு அல்ல, சாதி பாகுபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் மத பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள்... பிரிவனைக்கான மைதானமாக கோவிலை பயன்படுத்துகிறார்கள் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான பொதுக்கோவில்கள், குறிப்பிட்ட சாதியினரின் கோவில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளன. எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமம் கோர முடியாது. கோவிலை சாதி அடிப்படையில் நிர்வகிப்பது மத நடைமுறையும் அல்ல எனவும் நீதிபதி கடந்த வாரம் தனது உத்தரவில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications