மதுரை-கோவை மெட்ரோ ரயில் திட்டம்.. கிருஷ்ணகிரி எம்பி கேள்விக்கு மத்திய அரசு குட்நியூஸ்
சென்னை: மதுரை-கோவை மெட்ரோ திட்டத்திற்கு தமிழக அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கை கிடைத்து விட்டது என்று கூறியுள்ள மத்திய அரசு , விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளது. வரும் நாடாளுமன்ற பட்ஜெட்டில் கூட இதற்கான நிதியும் ஒதுக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு இன்னும் நிதி கேட்கவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
சென்னை மெட்ரோ முதல் கட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், திருவெற்றியூர் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும் இரண்டு வழித்தடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் தினம் தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் சேவை பெறுகிறார்கள். ஒரு மாதத்திற்கு சுமார் 90 லட்சம் பேர் வரை இப்போது பயணிக்கிறார்கள். சென்னை மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. பார்க்கிங் , உணவகம் உள்பட பல்வேறு வசதிகள் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் வேகமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக வரும் காலத்தில் சென்னை மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை அப்படியே பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1.50 கோடி மக்கள் வசிக்கும் நிலையில். அதில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தினசரி சென்னை மெட்ரோவை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடம் சென்னை மாநகரத்தை முழுமையாக கவர் செய்கிறது. அதாவது, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை ( 45.4கி.மீ ) 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை ( 26.1 கி.மீ. ) 4-வது வழித்தடம் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல் மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை ( 44.6 கி.மீ. ) 5-வது வழித்தடமும் செயல்பட போகிறது.
இந்த மூன்று வழித்தடங்களில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி ஒப்புதல் கிடைப்பதற்கு முன்பே தமிழக அரசு பணிகளை தொடங்கியது. இதனால் இந்த திட்டம் மாநில அரசின் திட்டமாக கருதப்பட்டு, அதற்கான நிதியை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் மத்திய அரசு, இந்த நிதியை ஒதுக்குவதாக அறிவித்து விட்டது.
இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்த இந்த நிதியில் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என்று கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. கோபிநாத் நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பினார். அதற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர்லால் கட்டா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் 'மத்திய அரசு ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் செயல்படுத்தப்படும் சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதில் மத்திய தொகை, திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் கேட்கும் கோரிக்கைக்கு ஏற்ப விடுவிக்கப்படும். அதில் சென்னை மெட்ரோ நிறுவனம், இதுவரை மத்திய நிதி உதவி குறித்து எந்த கோரிக்கையும் எழுப்பவில்லை' என்றார்.
மேலும் அவர் மதுரை-கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முழுமையான நகரப் போக்குவரத்து திட்டம் மற்றும் மாற்று பகுப்பாய்வு அறிக்கை ஆகியவற்றை கடந்த டிசம்பர் 5-ந் தேதி தான் தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த அறிக்கையை மத்திய அரசு முழுமையாக ஆய்வு செய்யும். இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு மற்றும் நிதி ஆதாரம் அடிப்படையில் அனுமதி வழங்கும்" என்றார்.
இதுபற்றி மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தமிழக அரசு மதுரை, கோவை மெட்ரோ திட்டத்திற்கு தந்த அறிக்கையை ஆய்வு செய்து, மத்திய அரசு அதற்கு விரைவில் அனுமதி அளிக்கும். பல மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இப்போதைக்கு சென்னையில் மட்டும் தான் மெட்ரோ திட்டம் இருக்கிறது. எனவே மதுரை-கோவைக்கு நிச்சயம் அனுமதி வழங்கப்படும். வரும் நாடாளுமன்ற பட்ஜெட்டில் கூட இதற்கான நிதியும் ஒதுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications