நிலவுக்கு டூர்.. ஆளுக்கு 'ஒரு' கோடி.. செயற்கை கடல் - அடிச்சுவிடும் சுயேட்சை வேட்பாளர்
சென்னை: தனது இதயத்தை இரும்பாக மாற்றி, மூளையை கற்பனை குதிரைகளாக மாற்றி தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார் சுயேச்சை வேட்பாளர் ஒருவர்.
திமுக, அதிமுக போட்டிப் போட்டு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளன. அதில், இரு கட்சியின் பல வாக்குறுதிகள் நடைமுறையில் சாத்தியமா? இப்போதிருக்கும் மோசமான பொருளாதார சூழலில் சாத்தியமா? என்ற விவாதம் ஒருபக்கம் நடந்து வருகின்றன.
மறுபக்கம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக போன்ற கட்சிகளும் ஏராளமான வாக்குறுதிகளை அறிவித்துள்ளன. இதுமட்டுமின்றி, சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.

அனைவருக்கும் ஐபோன்
அதில் குறிப்பாக, மதுரை தெற்கு தொகுதி சுயேட்சை வேட்பாளர் ஒருவர் 35 வாக்குறுதிகளை அளித்து, எதிர்க்கட்சி வேட்பாளர்களை மட்டுமல்லாது மக்களையே அதிர வைத்துள்ளார். மயக்கமடைய வைக்கும் அவரது அறிவிப்பில், "தொகுதி மக்கள் அனைவருக்கும் 'ஐபோன்' வழங்கப்படும். உலக வெப்பமயம் ஆவதால் தொகுதி சில்லென இருக்க 300 அடி உயர செயற்கை பனிமலை உருவாக்கப்படும். விடுமுறை நாளில் மக்கள் பொழுதுபோக்குக்காக செயற்கை கடல் உருவாக்கப்படும்.

வீட்டுக்கு ஒரு படகு
தேர்ந்தெடுக்கப்படும் 10 பேர் சுற்றுலா பயணமாக 100 நாட்கள் நிலவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். தொகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். இளைஞர்கள் தொழில் தொடங்க ஆளுக்கு ரூ.1 கோடி மானியம். போக்குவரத்து நெரிசலை குறைக்க கால்வாய்கள் வெட்டப்படும். இதில் பயணம் செய்ய வீட்டுக்கு ஒரு படகு வழங்கப்படும் என்று லிஸ்ட்டை அடுக்கிக் கொண்டே போகிறார்.

அடிச்சுவிட்ட வேட்பாளர்
சினிமாவில் கூட இப்படி காட்சிகளை அமைத்திருக்கமாட்டார்கள் போல.. அந்தளவுக்கு அளந்து விட்டிருக்கிறார். இவற்றில் ஒன்று கூட சாத்தியம் இல்லாத சூழலில், முக்கிய அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை கிண்டல் செய்யும் நோக்கிலேயே இப்படி அடிச்சுவிட்டிருக்கிறார் என்று சிலர் கூறுகின்றனர்.

ரிப்பீட் செய்வாரோ
தேர்தலில் வாக்குகள் வாங்குகிறாரோ இல்லையோ.. இன்னாரு இப்படி வாக்குறுதி கொடுத்திருக்காறாம்-ல என்று தொகுதி மக்கள் பேசும் வகையில் பிரபலமாகிவிட்டார். யார் கண்டா.. அடுத்த தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து சீட் வாங்கி இதையே இவர் ரிப்பீட் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.












Click it and Unblock the Notifications