போலீஸ் கைகொடுக்காத இடத்தில் கைகொடுத்த பொதுமக்கள்! - தனிஷ்க் கொள்ளையை உடைத்த 4 'காமன் மேன்' ஹீரோக்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. சினிமாவை மிஞ்சும் வகையில் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, தடயங்களை அழித்துவிட்டுத் தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்க மதுரை மாநகர காவல்துறையின் 9 தனிப்படைகள் இரவு பகலாகக் களமிறங்கின.

Madurai Tanishq Heist How a Staffer Herder amp amp Bus Driver Helped Crack the 15-Cr Robbery

ஆனால், இந்த மெகா கொள்ளை வழக்கை இவ்வளவு குறுகிய நாட்களில் முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பின்னால், சாமானிய பொதுமக்கள் கொடுத்த மிக முக்கியமான தகவல்களும், அவர்களின் விழிப்புணர்வுமே முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது என்பது இப்போது தெரியவந்துள்ளது.

குற்றவாளியை அடையாளம் கண்டது முதல், புதைக்கப்பட்ட தங்கத்தை மீட்டது வரை, கடைசியாக முக்கியக் குற்றவாளி நிஷாந்தைக் கைது செய்தது வரை சாமானிய மக்கள் எப்படி போலீசாருக்குக் கைகொடுத்தார்கள் என்பதைப் பார்க்கலாம்.

முதல் துப்பு கொடுத்த நகைக்கடை ஊழியர்

கடந்த நவம்பர் 12-ம் தேதி அதிகாலை, முகமூடி மற்றும் கையுறை அணிந்து கொண்டு லிப்ட் பராமரிப்புப் பகுதி வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர், 10 கிலோ தங்கம் மற்றும் 1 கிலோ வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். சிசிடிவியில் முகம் தெரியாததால் குற்றவாளி யார் என்பதைக் கண்டறிவதில் ஆரம்பத்தில் பெரும் சவால் இருந்தது.

அப்போது, அந்த நகைக்கடையில் பணியாற்றும் ஒரு சாதாரண ஊழியர் போலீசாருக்கு முதல் வெளிச்சத்தைக் காட்டினார். கொள்ளை நடப்பதற்கு முன்பு இரண்டு, மூன்று முறை ஒரு இளைஞர் கடைக்குள் வந்து சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிப் பார்த்துச் சென்றதை அந்த ஊழியர் கூர்ந்து கவனித்துள்ளார். ஒவ்வொரு முறையும் வேறு வேறு சட்டை அணிந்து வந்தாலும், ஒரே தொப்பி மற்றும் கையில் கட்டுப் போட்டிருந்த அந்த நபரின் நடவடிக்கையை ஊழியர் போலீசாரிடம் விவரித்தார். அதை வைத்துப் பழைய சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தபோதுதான், கொள்ளையன் யூடியூபர் நிஷாந்த் என்பது உறுதி செய்யப்பட்டது.

துணிகளை எரிப்பதைப் பார்த்த மாடு மேய்ப்பவர்

கொள்ளையடித்த பிறகு, தடயங்களை அழிப்பதற்காக நிஷாந்தும் அவரது தந்தை சுரேஷும் சேர்ந்து, கொள்ளையின் போது அணிந்திருந்த உடைகள் மற்றும் பொருட்களை மாடக்குளம் கண்மாய் அருகே உள்ள விவசாய நிலத்தில் வைத்துத் தீயிட்டு எரித்துள்ளனர். யாருக்கும் தெரியாமல் இதைச் செய்துவிட்டதாக அவர்கள் நினைத்தனர்.

ஆனால், அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சாமானிய நபர் ஒருவர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் துணிகள் எரிக்கப்படுவதையும், சிலர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதையும் பார்த்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதிக்குச் சென்ற ஆட்டோவின் சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம்தான், நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் காதலியான இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி ஆகியோர் சிக்கினர்; மாடக்குளம் பகுதியில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 முதல் 6 கிலோ நகைகளும் மீட்கப்பட்டன.

திருப்பூரில் போன் கொடுத்த வழிப்போக்கர்

போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த நிஷாந்த், தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டுத் திருப்பூருக்குத் தப்பிச் சென்றார். ஆனால், காதலி மீனாட்சியிடம் பேசுவதற்காகத் திருப்பூரில் முன்பின் தெரியாத ஒரு வழிப்போக்கரிடம் செல்போனை இரவல் வாங்கி அழைத்துப் பேசியுள்ளார். அந்த அழைப்புதான் மீனாட்சியையும் சுரேஷையும் போலீசாரிடம் நேரடியாகக் காட்டிக்கொடுத்தது.

தர்மபுரியில் மடக்கிப் பிடித்த பேருந்து ஓட்டுநர்

இந்த வழக்கின் உச்சகட்ட திருப்பமே ஒரு அரசுப் பேருந்து ஓட்டுநரின் சமயோசித புத்தியால் நடந்ததுதான். 9 தனிப்படை போலீசாருக்கும் போக்கு காட்டி வந்த நிஷாந்த், சேலம் நோக்கிச் செல்லும் பேருந்து ஒன்றில் சாதாரணப் பயணி போலப் பயணம் செய்துள்ளார்.

அப்போது அந்தப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர், தொலைக்காட்சி செய்திகளில் வெளியான நிஷாந்தின் புகைப்படத்தை நினைவில் வைத்திருந்து, பேருந்தில் அமர்ந்திருந்த நபரை அடையாளம் கண்டுகொண்டார். சற்றும் பதற்றமடையாமல், உடனடியாகத் தனக்குத் தெரிந்த காவலருக்குத் தகவல் கொடுத்த அந்த ஓட்டுநர், போலீசார் சொன்னபடி தர்மபுரி சேஷம்பட்டி அருகே பேருந்தை நிறுத்தினார். இதனால், பின்பக்க ஜன்னல் வழியாகக் குதித்துத் தப்பிக்க முயன்ற நிஷாந்தை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.

எவ்வளவு பெரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சினிமா பாணியில் குற்றவாளிகள் திட்டம் தீட்டினாலும், விழிப்புணர்வுடன் இருக்கும் சாமானிய மக்களின் கண்களில் இருந்து அவர்களால் தப்பிக்க முடியாது என்பதை இந்த மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+