மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கு இந்த பெட்டி தான் காரணம்.. சூட்கேஸ் உடன் திமுகவின் பரந்தாமன் பிரச்சாரம்!
சென்னை: மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது சூட்கேஸை தூக்கி காண்பித்து இதற்காகத்தான் இங்கு இடைத்தேர்தல் வந்தது எனக் கூறி பொதுமக்களிடம வாக்கு சேகரித்துள்ளார் திமுக வேட்பாளர் பரந்தாமன்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் வென்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளன.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக சார்பில், மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் போட்டியிடுகிறார். அவர், பிரச்சாரம் செய்யும்போது, சூட்கேஸ் ஒன்றைக் காட்டி, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
பரந்தாமன் தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் மத்தியில் பேசுகையில், "மதுராந்தகத்தில் இடைத்தேர்தல் வந்திருக்கிறது. உலகத்தில் எந்த மாநிலத்திலாவது இதுவரை இப்படி நடந்திருக்கிறதா? இங்கு இடைத்தேர்தல் வந்துள்ளதற்கு காரணம் இந்தப் பெட்டி தான். இங்கே ஒரு அம்மையாரைத் தேர்ந்தெடுத்து நீங்கள் சட்டமன்றத்திற்கு அனுப்பினீர்கள். ஆனால் 20 நாளில் அவர் ராஜினாமா செய்துவிட்டார்.
20 நாளில் ராஜினாமா செய்ததற்கு என்ன காரணம்? யார் காரணம்? யாரையாவது அந்த அம்மா கேட்டார்களா? இந்த மதுராந்தகம் மக்கள் எல்லாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து அனுப்பினார்களே, உங்களை கேட்டார்களா? உங்களுடைய வாக்கு எவ்வளவு விலைமதிப்பற்ற வாக்கு.
ஒரு நபருக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி என்பது ஒரு பெரிய பதவி. கோடிக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் வெறும் 234 பேர்தான் தமிழ்நாட்டினுடைய மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்திற்குப் போகிறார்கள்.
அப்படிப்பட்ட பெரும் வாய்ப்பைக் கொடுத்த நீங்கள், உங்களுடைய வாக்கை மதிக்காமல், உங்களை உதாசீனப்படுத்தி, உங்களை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் ராஜினாமா செய்தது என்பது இந்த மதுராந்தகம் தொகுதி மக்களை கேலிக்கு உள்ளாக்கியது என்று நான் சொல்லவில்லை, சென்னை உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் என்ன? அந்த அம்மா எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டு உங்களுடைய விரலில் இருக்கக்கூடிய மை காய்வதற்கு முன்னால், ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிட்டார் என்று சொன்னால் அதற்கு என்ன காரணம்? இதோ இதுதான் காரணம். இந்த பெட்டி தான் காரணம்.
இது என்னவென்று தெரிகிறதா? எம்.எல்.ஏ பதவியை விட இதுதான் பெரிதாக அவர்கள் நினைத்து, உங்களையெல்லாம் மதிக்காமல், உங்களிடத்தில் எதையும் கேட்காமல் இன்றைக்கு அந்த அம்மையார் உங்களிடத்திலே வாக்குகளைக் கேட்டு வருகிறார்.
இது எப்படிப்பட்ட நயவஞ்சகத்தனம்? இது எப்படிப்பட்ட துரோகம்? இந்த துரோகத்தை ஒருபோதும் இந்த பரந்தாமன் செய்யமாட்டான். இந்த துரோகத்தை ஒருபோதும் திராவிட முன்னேற்றக் கழகம் செய்யாது.
உங்களுக்காகப் பணியாற்றுவதற்கு எங்களுக்கு வாய்ப்பு அளித்தால், முழுவதுமாக மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு நான் இருந்து முழுநேரமும் பணியாற்றுவேன் என்பதை இந்த நேரத்திலே உங்களிடத்திலே நான் உத்தரவாதமாக தெரிவித்துக் கொள்கிறேன்." எனப் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications
