மதுராந்தகத்தில் வெற்றியை தீர்மானிக்க போகும் பெண்கள்! புதிய வாக்காளர்கள் எத்தனை பேர்?
சென்னை: மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றியை பெற தவெக, திமுக, அதிமுக கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் இருப்பதால், வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் பெண் வாக்காளர்களே உள்ளனர் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர், வாக்களித்த விரலில் வைத்த மை மறைவைதற்குள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால், அந்த இரண்டு தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது.

மதுராந்தகம் இடைத்தேர்தல்
இரண்டு தொகுதிகளிலும் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. ஆளும் தவெக, எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, நாம் தமிழர் போட்டியில் உள்ளன. அதேபோல, தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இடதுசாரிகளும் இந்த தொகுதியில் தனித்து களமிறங்கியுள்ளது. தவெக ஆட்சி அமைந்த 120 நாட்களில் நடைபெறும் தேர்தல் என்பதால், விஜய் ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் சான்றிதழாக இந்த தேர்தல் முடிவுகள் பார்க்கப்படும். இதனால், இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது.
இன்னொரு பக்கம் கூட்டணி கட்சிகளின் நெருக்கடியை சமாளிக்கவும் தவெக இதில் வெற்றி பெறுவது முக்கியமானதாக உள்ளது. அப்படியே எதிர்க்கட்சிகள் பக்கம் பார்த்தால், தவெக ஆட்சியின் மீதான அதிருப்தி, விஜய் செல்வாக்கு சரிந்து இருப்பதை நிரூபித்து காட்டும் விதமாக தவெகவை வீழ்த்தி வெற்றி பெற வியூகம் வகுத்து வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால், இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் திருவிழா களை கட்டியுள்ளது.
எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் கடந்த பொதுத்தேர்தலில் 2,12,636 பேர் வாக்களித்துள்ளனர். இதில் ஆண்கள் 1,04,496 பேர்களும், பெண்கள் 1,08,075 பேர்களும், மூன்றாம் பாலினத்தவர் 65 பேரும் வாக்களித்து இருக்கிறார்கள். தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் 2,13,788 பேர் வாக்களிக்க உள்ளனர்.
ஆண் வாக்காளர்கள்: 1,04,926
பெண் வாக்காளர்கள்: 1,08,797
மூன்றாம் பாலினத்தவர்: 65
பெண் வாக்காளர்களே அதிகம்
ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடும் போது, வாக்காளர்கள் எண்ணிக்கை 1,152 உயர்ந்துள்ளது. இதில், ஆண்கள் 430 பேரும், பெண்கள் 722 பேரும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் இருப்பதால், வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் பெண் வாக்காளர்களே உள்ளனர் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
களம் யாருக்கு சாதகம்?
தற்போது தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைக்கின்றன. ஆட்சியின் மீதான அதிருப்தியும் ஓரளவு இருக்கவே செய்கிறது. ஆனால், பெண் வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு செல்வாக்கு அதிகமாக இருப்பது ஒன் இந்தியாவின் கள ஆய்விலும் தெரிந்தது. ஆண்கள் வாக்குகள் சிதறுவதும், பெண் வாக்காளர்கள் இடையே விஜய்க்கு பெரும் செல்வாக்கு இருப்பதும் ஆளும் கட்சிக்கே இந்த தொகுதி இருப்பதாக தெரிகிறது. அதேநேரத்தில் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இன்னும் பிரசாரத்தை ஆரம்பிக்கவில்லை. அவர்கள் பிரசாரம் செய்ய தொடங்கிய பிறகு களத்தில் நிலமை மாறலாம் என்பதும் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.



Click it and Unblock the Notifications
