“கேலிக்கூத்து..” ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை கண்டித்த சென்னை ஐகோர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் போட்டியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவது கேலிக்கூத்து என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர். 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

by election high court tvk

இந்த 7 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாததால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.

இரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழ்நாட்டில் அரசியல் களம் பரபரக்கத் தொடங்கிவிட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி, இடதுசாரிகள் என 5 முனை போட்டி நிலவுகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவருமே தற்போது தவெக சார்பில் இடைத்தேர்தலில் களமிறங்குகின்றனர். திமுக மதுராந்தகத்தில் பரந்தாமனையும், தாராபுரத்தில் சுகன்யாவையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் கே. பானுமதி ஆகியோா் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பாக மதுராந்தகம் தொகுதியில் கோ. ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு. கார்த்திகா ஆகியோர் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சொந்த அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், பொதுமக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது. இந்தச் செலவுகளுக்கு வேட்பாளர்களையே பொறுப்பாக்கும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் அரசியல் காரணங்களுக்காக மக்கள் தீர்ப்பை புறக்கணித்து பதவி விலகுபவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏக்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவது கேலிக்கூத்து என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

மேலும், குறுகிய காலத்தில் பதவியை ராஜினாமா செய்தது வாக்காளர்களை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்த ஐகோர்ட், ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

அதோடு, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+