விஜய் தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. இடைத்தேர்தலில் தவெக தோல்வி அடைந்தால் என்ன நடக்கும்?
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் ஒருவேளை தோல்வியடைந்தால், தவெக தலைமையில் அமைந்த கூட்டணி ஆட்சிக்கும், முதல்வர் விஜய்க்கும் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும்? எனப் பார்க்கலாம்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து வரும் 6 ஆம் தேதி 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் ஐ. பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் கோ. ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

5 முனை போட்டி
தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் எஸ். சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் மு. கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தவெக கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வந்த இடதுசாரி கட்சிகளும் தனித்து வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், இரு தொகுதிகளிலும் கடுமையான 5 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
ஆளும்கட்சிக்குச் சவால்
வழக்கமாக இடைத்தேர்தல்கள் ஆளும்கட்சிக்குச் சாதகமாகவே அமையும் என்றாலும், சில நேரங்களில் அதிர்ச்சி திருப்பங்களும் நடந்துள்ளன. முழு பெரும்பான்மை இல்லாத தவெக அரசுக்கு எதிரான வியூகங்களுடன் திமுக மற்றும் அதிமுக கடும் போட்டியை அளிக்கின்றன. இதில் ஏதேனும் ஒரு தொகுதியில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றாலும் அது முதல்வர் விஜய்க்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
விஜய் என்ற தனிநபர் பிம்பத்தை நம்பியே மக்கள் தவெகவுக்கு ஆட்சியதிகாரத்தைக் கொடுத்துள்ளதாலும், அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் சேர்ந்த அதே வேட்பாளர்களே மீண்டும் களமிறக்கப்படுவதாலும் இந்தத் தேர்தல் தவெகவிற்கு கௌரவப் பிரச்சனையாக மாறியுள்ளது. இதில் பின்னடைவு ஏற்பட்டால் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தமும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
தவெக வென்றால் என்ன நடக்கும்?
இந்த இடைத்தேர்தலில் 2 சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? ஏற்கனவே தவெகவுக்கு தனியாக 107 எம்.எல்.ஏக்கள் பலம் உள்ளது. இடைத்தேர்தலில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால் தவெகவின் தனிப்பட்ட பலம் 109 ஆக அதிகரிக்கும். ஏற்கனவே கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருப்பதால் ஆட்சி தொடர்ந்து சிக்கலின்றி நடைபெறும்.
அதோடு, இடைத்தேர்தலில் ஏற்கனவே அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவியவர்கள் வெற்றி பெற்றால், மேலும் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் கட்சி தாவி, தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்யக்கூடும். தவெக தனிப்பெரும்பான்மை பெறும் வகையில் அதிகமான எம்.எல்.ஏக்களை கட்சிக்கு இழுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக தோல்வி அடைந்தால் என்ன நடக்கும்?
ஒருவேளை, 2 தொகுதிகளிலும் தவெக தோல்வி அடைந்தாலும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள சூழலில், ஆட்சியின் பெரும்பான்மையை நேரடியாகப் பாதிக்காது. அரசைக் கவிழ்க்கும் அளவுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாத வரைக்கும் ஆட்சி தடையின்றித் தொடரும்.
கூட்டணி ஆட்சியில் இருக்கும் சூழலில் இடைத்தேர்தல் தோல்வி ஏற்படும்போது, ஆட்சியில் அங்கம் வகிக்கும் அல்லது ஆதரவளிக்கும் கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸ், இடதுசாரிகள் போன்றவை தங்களது கொள்கை சார்ந்த அழுத்தங்களை அதிகரிக்கக்கூடும். அரசின் கொள்கை முடிவுகளில் தங்களின் பங்களிப்பை மேலும் பலப்படுத்த அவர்கள் முயற்சிக்கக்கூடும்.
எதிர்க்கட்சிகளுக்கு அவல்
எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக போன்றவை ஆளும்கட்சியின் இந்தத் தோல்வியைக் காரணமாக வைத்து, "மக்களிடம் ஆட்சிக்கு இருந்த வரவேற்பு குறைந்துவிட்டது" என்றும், ஆட்சி மீது மக்களுக்குத் திருப்தி இல்லை என்றும் அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைத்து போராட்டங்களையும் தீவிரப்படுத்தும்.
இடைத்தேர்தல் முடிவுகள் என்பவை மக்களிடையே இருக்கும் மனநிலையைக் காட்டும் எச்சரிக்கை மணி. இதனால், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் மேலும் விரைவாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கும்.
சட்டமன்றத்திற்குள் மசோதாக்களை நிறைவேற்றும் போதும், முக்கிய முடிவுகளை எடுக்கும் போதும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைச் சமாளிக்க அரசு கூடுதல் கவனத்துடனும், கூட்டணிக் கட்சிகளின் முழு ஆதரவுடனும் செயல்பட வேண்டிய சூழல் உருவாகும்.
தவெக எம்.எல்.ஏக்கள்?
அதோடு, இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியடைந்தால் அது பல்வேறு சிக்கல்களை அரசியல் ரீதியாக சந்திக்க நேரிடும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து திமுக உடன் கூட்டணி வைக்க முயன்றார் என்றுதான் எடப்பாடியை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்ததாகச் சொல்கிறார்கள், இப்போது அவர்கள் தோல்வியடையும் பட்சத்தில், அதிமுகவை உடைக்க விஜய் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது என்ற விமர்சனம் அதிமுக தரப்பில் எழும்.
அதிமுகவை உடைக்க விஜய் முயற்சிகளைச் செய்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தவெக பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்கள் மாற்றுக் கட்சிகளை நோக்கிச் செல்லக்கூடும். இது அரசியல் ரீதியாக விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications
