ரூ.8,000.. பீகார் தேர்தலின் போது பாஜக ஆடிய ஆட்டம்.. தமிழ்நாட்டில் ரிப்பீட் செய்த ஸ்டாலின்!
சென்னை: பீகார் சட்டசபைத் தேர்தலின் போது மகளிரின் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் பாஜக வரவு வைத்திருந்த சூழலில், அதே பாணியில் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வரவு வைத்திருக்கிறார். தேர்தலின் போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்க முயற்சித்ததால், 3 மாதங்களுக்கான தொகையையும், கோடை கால சிறப்பு தொகுப்பாக ரூ.2 ஆயிரமும் சேர்த்து ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது.
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ் குமார் மீதான அதிருப்தி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பிரச்சனை, உட்கட்டமைப்பு உள்ளிட்ட ஏராளமான சிக்கல் இருந்த போதும், என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கு தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பாக 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு கட்டத் தேர்தலின் போதும் இந்த திட்டம் மூலமாக ரூ.10 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதன் மூலமாக பீகார் பெண்களின் ஆதரவை என்டிஏ கூட்டணி பெற்றது. இந்த சம்பவம் தேர்தலின் போது மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அப்போதே பீகார் மாடலில் தமிழ்நாட்டிலும் மத்திய அரசு சார்பாக ரூ.10 ஆயிரம் அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இந்த மாதம் மட்டும் ரூ.5 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கூடாது என்ற விதிகளின் காரணமாக, இந்த திட்டம் முடக்கப்படலாம் என்பதை முதல்வர் ஸ்டாலின் அறிந்திருக்கிறார்.
அதற்கேற்ப முன்கூட்டியே ரூ.5 ஆயிரம் பணத்தை வங்கி கணக்கில் போட்டுள்ளார். பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மகளிர் உரிமை ரூ.3 ஆயிரமும், கோடை கால சிறப்பு தொகுப்பாக ரூ.2 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கல் பண்டிகையின் போது ரூ.3 ஆயிரம் ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்பட்டது.
இதனால் கடந்த 3 மாதங்களில் மட்டும் தமிழக அரசு ரூ.8 ஆயிரம் கொடுத்துள்ளது. திமுகவின் இந்த நகர்வு தேர்தலின் போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக பீகாரில் பாஜக ஆட்டத்தை, அப்படியே முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு காய் நகர்த்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications