மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500: வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா? செங்கோட்டையன் கொடுத்த காட்டமான பதில்
சென்னை: மகளிர் உரிமைத்தொகையை (Magalir Urimai Thogai Scheme) ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு செங்கோட்டையன் காட்டமான பதிலை அளித்து இருக்கிறார். செங்கொட்டையன் அளித்த பதிலை வைத்து பார்க்கும் போது வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுவதாக பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.
மகளிருக்கு ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன் கூறியதாவது:-

13 லட்சம் கோடி கடன் உள்ளது
நிதி நிலை எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா இல்லையா? ஆவலோடு எதிர்பார்க்கிறீர்கள்.. உங்கள் வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் கல்யாணம் முடித்து கொடுக்க முடியுமா? அது முடியாது செலவு பற்றாது.. 13 லட்சம் கோடி கடன் உள்ளது. இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமா இல்லையா.. ஆயிரம் ரூபாய் அவுங்க (திமுக) எவ்ளோ நள் கழித்து கொடுத்தார்கள்.
பிறகு எங்களை மட்டும் எப்போ கொடுப்பீங்க என்று கேட்கிறீங்க" என்று காட்டமாக பதிலளித்தார். செங்கோட்டையன் அளித்த பதிலை வைத்து பார்க்கும் போது மகளிருக்கு மாதம் தோறும் ரூ.2,500 வழங்கும் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
ரூ.2,500 ஆக அதிகரித்து அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அதாவது, செப்டம்பர் 15, 2023-ல் இந்த திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியது. திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு திட்டங்களில் ஒன்றாக இந்த உரிமைத்தொகை திட்டம் பார்க்கப்பட்ட நிலையில், இதனை பின்பற்றி பல மாநிலங்களும் மகளிருக்கு உதவித்தொகை திட்டத்தை அறிமுகம் செய்தது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் உயர்த்தி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மாதம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவித்த நிலையில், தவெக ஒரு படி மேலே போய் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது.
வரும் 4 ஆம் தேதி பட்ஜெட்
தவெக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் கூறியபடி மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பு தமிழக மக்கள் இடையே அதிகரித்துள்ளது. தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல் பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்பு இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள சூழலில்தான் செங்கோட்டையனின் மேற்கண்ட பதில் அமைந்துள்ளது.
முன்னதாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதியமைச்சர் மரிய வில்சனிடன் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த மரிய வில்சன், "100 சதவீதம் மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய பட்ஜெட்டாக தவெக அரசின் பட்ஜெட் இருக்கும்" என்றார். மேலும், திமுகவின் ஊழல் பட்டியல் வெளியாகும் என்றும் லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டில் வாழப்போகிறோம் என்றும் மரிய வில்சன் கூறினார்.


Click it and Unblock the Notifications
