மகளிர் உரிமை தொகை டூ மாதம் தோறும் மின் கட்டணம் வரை.. தமிழக பட்ஜெட் 2025 எப்படி இருக்கும்?
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு இந்த பட்ஜெட் மிக முக்கியமானது ஆகும். இந்த பட்ஜெட்டில் கல்விக்கடன் ரத்து, மகளிர் உரிமை தொகை, மாதம் தோறும் மின்கட்டணம் உள்பட என்னென்ன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் இவை எல்லாம் திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் ஆகும்.
2021ம் ஆண்டு மே மாதம் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இதுவரை மூன்றரை ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மகளிருக்கு விலையில்லா பஸ் பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை, கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு போன்றவற்றை செய்துவிட்டது.

அதேநேரம் தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தமிழ்ப்புதல்வன் திட்டம், மாணவர்களின் திறன் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நான் முதல்வன் திட்டம் மிகப்பெரிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாதம் ஒரு முறை மின் கட்டணம்
ஆனால் திமுக அரசு சொல்லிய மிக முக்கியமான திட்டங்களான மின் கட்டணம் மாதம் ஒரு முறை, கல்விக்கடன் ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு, சிலிண்டருக்கு மானியம், பழைய ஓய்வூதிய திட்டம் (பரிசீலிக்கப்படும்) போன்ற திட்டங்கள் இன்று வரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதில் கல்வி கடன் ரத்து, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றை செயல்படுத்துவது என்பது இப்போது உள்ள நிதி நெருக்கடியில் மிகவும் சவாலானது என்பதால் அந்த திட்டங்களை அரசு இந்த ஐந்தாண்டில் செயல்படுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
2025 பட்ஜெட் எப்படி
இந்த சூழலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வருகிற பிப்ரவரி மாதம் சட்டசபையில் 4வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. தமிழக சட்டசபைக்கு 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் வரும் பட்ஜெட் தான் (2025) முழு பட்ஜெட்டாக இருக்கும். 2026-ம் ஆண்டு தாக்கல் செய்வது இடைக்கால பட்ஜெட் தான்.
கல்விக்கடன் ரத்து
எனவே அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி , வீடுகளுக்கு மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கும் திட்டம், 30 வயதுக்கு உட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், பெட்ரோல் விலை குறைப்பு போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு நினைத்தால், அதற்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே அது சாத்தியம்.
மகளிர் உரிமை தொகை அதிகரிப்பு
அதேபோல் 2026ல் சட்டசபை தேர்தல் வர உள்ளதால், கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்க வேண்டிய அவசியமும் திமுக அரசுக்கு உள்ளது. மகளிர் உரிமை தொகையை மற்ற மாநிலங்களை போல் கூடுதலாக வழங்குவற்கு புதிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாலின் தலைமையிலான அரசு, கல்வி, மாணவர்கள் உயர்கல்வி, மாணவர்களின் திறன்மேம்பாடு, மகளிர் மேம்பாடு போன்றவற்றிருக்கே அதிகப்படியான நிதியினை கடந்த மூன்றரை ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளது.
பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
அதேநேரம் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க வரும் ஆண்டில் புதிய திட்டங்களையும் ஏற்கனவே அறிவித்த திட்டங்களையும் செயல்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. மகளிர் உரிமை தொகையை தாண்டி, மின் கட்டணம் மாதம் ஒருமுறை என்ற திட்டத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என்பதால், அந்த திட்டத்தை செயல்படுத்த அரசு மாற்றுவழிமுறைகளை யோசிக்கும் என்ன எதிர்பார்ப்பு உள்ளது.
பழைய ஓய்வூதியம்
அதேபோல் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஏதாவது பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா? என்று அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதை அறிய பிப்ரவரி மாதம் காத்திருக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் தமிழக அரசு, எந்தெந்த திட்டங்களை நிறைவேற்ற முடியும்.. அதற்கான நிதிகளை ஒதுக்குவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது குறித்து துறை ரீதியான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு துறையின் தலைவர்களாக உள்ள ஐஏஏஸ் அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டம் சில நாட்கள் நடைபெறலாம். அதன்பின்னர் பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். அப்போது தான் அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் விடை தெரியும்.












Click it and Unblock the Notifications