மகாவிஷ்ணு விவகாரத்தால் புகையும் கல்வித் துறை.. தலைமை ஆசிரியர்கள் Vs அதிகாரிகள்
சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சாளர் மகா விஷ்ணு காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை தலைமை ஆசிரியர்கள் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 2 தலைமை ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதற்காக தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் பேச்சாளர் மகாவிஷ்ணுவை அழைத்துப் பேச வைத்துள்ளனர். அப்போது அவர் "மாற்றுத் திறனாளிகள் குறைபாடுகளுக்கு முன் ஜென்மத்தில் செய்த பாவம் தான் காரணம். மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது. போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத் திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் பிறக்கிறார்கள்.

அதேபோல, கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள்தான் காரணம்" என்று பேசினார். அப்போது, மாகவிஷ்ணுவின் இந்தப் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர் சங்கர் இதனை கடுமையாக எதிர்த்தார். அப்போது, மகாவிஷ்ணு, அந்த ஆசிரியர் அறிவற்றவர் என்று விமர்சனம் செய்தார்.
பதிலுக்கு அவரும் உங்கள் பெயர் என்ன?. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னால் தான் உங்களுக்கு நான் பதில் சொல்வேன் என மகா விஷ்ணுவும், ஆசிரியர் சங்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான் வீடியோ இணையத்தில் பரவியது. மகாவிஷ்ணுவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. மகாவிஷ்ணு மீது மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் காவல்துறையில் புகாரும் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் விசாரணையில் இறங்கியது பள்ளிக் கல்வித் துறை. விசாரணையை அடுத்து அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருவள்ளூர் கோவில் பதாகை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை அரது மாதிரிப் பள்ளித் தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை விமானநிலையம் வந்த மகா விஷ்ணுவை காவல்துறை கைது செய்தது.
இந்நிலையில், 2 அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளியில் பேச்சாளர் மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சியை நடத்த அனுமதித்த அதிகாரி யார் என விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த கல்வித் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்கப்படும் வரை தலைமை ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நீதி இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் திருவொற்றியூர் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகாவிஷ்ணு மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி வரை மகா விஷ்ணு நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications