கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் மகேந்திரன் போட்டியிடுவாரா?.. சான்ஸ் கொடுப்பாரா ஸ்டாலின்?
சென்னை: கோவை மாநகராட்சியின் மேயர் தேர்தலில் நேற்று இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
மாற்றுக் கட்சியினரை உபசரிப்பதில் ஸ்டாலினுக்கு நிகர் அவரே. வாக்கு வங்கியை வைத்துள்ள மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தால் அவர்கள் கவனிக்கப்படும் விதமே வேறு.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைவாரா இல்லை பாஜகவில் இணைவாரா என்ற விவாதம் கடந்த இரு மாதங்களாக நடந்து வந்தது.

விவாதம்
இந்த நிலையில் திமுகவில் இணைந்ததன் மூலம் மேற்கண்ட விவாதங்களுக்கு மகேந்திரன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். மகேந்திரன் நேர்மையானவர். அவருக்கென கோவை தொழிலாளர்கள் வாக்களிப்பர். இதை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மகேந்திரன் நிரூபித்துவிட்டார். மக்கள் நீதி மய்யம் தொடங்கிய ஒரே ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மகேந்திரன் அதிக வாக்குகளை பெற்றிருந்தார்.

சிங்காநல்லூர்
அது போல் சட்டசபை தேர்தலிலும் அவர் சிங்காநல்லூரில் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும் அக்கட்சி வேட்பாளர்களில் கமலுக்கு அடுத்தபடியாக மகேந்திரன்தான் அதிக வாக்குகளை பெற்றார். எனவே தொழில் நகரமான கோவையில் மகேந்திரனுக்கு என வாக்கு வங்கி இருப்பதில் சந்தேகமே இல்லை.

உள்ளாட்சி தேர்தல்
இந்த நிலையில் தற்போது இணைந்த மகேந்திரனுக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி மேயராக போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுகவில் மகேந்திரன் இணைந்தால் அவர் சிட்கோ தலைவராக்கப்படுவார் என்ற பேச்சு இருந்தது.

அஸ்திவாரம்
கொங்கு மண்டலத்தில் திமுக பலம்வாய்ந்த கட்சியாக இருக்க அஸ்திவாரமே உள்ளாட்சி தேர்தல்தான். இந்த தேர்தலில் கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் மகேந்திரனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அந்த மாநகராட்சி திமுகவுக்குதான் என அடித்து சொல்கிறார்கள். அந்த அளவுக்கு செல்வாக்கு வாய்ந்தவர் நம்ம டாக்டர்.

தேர்தல் வாய்ப்பு
ஏற்கெனவே மாற்றுக் கட்சியினருக்கு நிறைய பதவிகளையும் தேர்தல் வாய்ப்புகளையும் திமுக கொடுத்து வருவதால் உடன்பிறப்புகள் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே தேர்தல் வாய்ப்பை சும்மா கொடுக்காமல் கொங்கு மண்டலத்தை பலப்படுத்தும் வேலைகளை மகேந்திரன் செவ்வனே செய்துமுடித்தால் அப்போது அவருக்கு தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பளிக்கும் என தெரிகிறது.

கேள்வி
அது போல் மகேந்திரனுக்கு வாய்ப்பளிக்கும் பட்சத்தில் அதை யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள். எனவே கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் மகேந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லை அவர் ஸ்டாலின் சொன்ன அசைன்மென்டை (கொங்கு மண்டல அதிமுக முக்கிய புள்ளிகள் திமுகவுக்குள் இழுப்பது) செய்து முடித்தால் மட்டுமே அவருக்கு பதவியும் தேர்தல் வாய்ப்பும் வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications