இன்று முதல் சென்னை ஏசி மின்சார ரயில் சேவையில் மேஜர் மாற்றம்.. கூடுதல் ரயில்கள் இயங்கத் தொடங்கியது!
சென்னை: இன்று முதல் சென்னை ஏசி மின்சார ரயில் சேவையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கோரிக்கையை ஏற்று பீக் ஹவர்களில் கூடுதல் ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. புதிய அட்டவணை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுவரை 6 வேளைகளில் இயக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் 8 வேளைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் பயணிகளுக்கு பெரும் வரப் பிரசாதமாக உள்ளது. தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை நகருக்குள் வந்து செல்லும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு சென்னை - தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடங்களில் 240 க்கும் மேற்பட்ட சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஏசி ரயில்
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இதற்கு முன்பு ஏசி வசதி இல்லை. ஏசி வசதியுடன் கூடிய ரயில்களை இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்தது. பயணிகளின் இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த 19 ஆம் தேதி முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிய ஏசி மின்சார ரயில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள், மாணவர்கள் என புறநகர் ரயில்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு நவீன வசதியான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஏசி ரயில் கட்டணம்
கோடை வெப்பம் தகிக்கும் நேரத்தில் ஏசி மின்சார ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்தது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால், இந்த ரயில் கட்டணம் மற்றும் ரயில் இயக்கப்படும் நேரம் ஆகியவை பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் இல்லை என பயணிகள் புகாரை முன்வைத்தனர்.
ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்களில் டிக்கெட் விலை குறைந்தபட்சம் 35 ரூபாயில் இருந்து தொடங்கி அதிகப்பட்சமாக 105 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து கோட்டை, சென்னை பார்க், எழும்பூர் வரை ரூ.35, மாம்பலம் ரூ.40, கிண்டி, பரங்கிமலை, திரிசூலம் ரூ.60, தாம்பரம், பெருங்களத்தூர் ரூ.85, கூடுவாஞ்சேரி, பொத்தேரி ரூ.90, சிங்கப்பெருமாள்கோயில் ரூ.100, பரனூர், செங்கல்பட்டு ரூ.105 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
பயணிகளின் கோரிக்கை
மேலும், இந்த ரயில் சேவை கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்கு செங்கல்பட்டுக்கு இயக்கப்பட்டது. மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து காலை 9 மணிக்கு கடற்கரைக்கு இயக்கப்பட்டது. பின்னர் கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு செங்கல்பட்டுக்கும், செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு கடற்கரைக்கும் இயக்கப்பட்டது. இரவு நேர ரயில் சேவையாக கடற்கரையில் இருந்து 7.35 மணிக்கு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டது.
பயணிகள் அதிகமானோர் பயணிக்கும் பீக் ஹவர்களில் இந்த ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பயணிகள் முன்வைத்தனர். தெற்கு ரயில்வே இது தொடர்பாக பயணிகளிடம் கருத்து கேட்க வாட்ஸ் அப் எண்ணை வெளியிட்டு இருந்தது. இதில் பயணிகள் தங்கள் கருத்துக்களை அளித்து இருந்தனர். இதில் பெரும்பாலான பயணிகள் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
கோரிக்கையை ஏற்றது தெற்கு ரயில்வே
பயணிகள் கருத்துகளை ஏற்று தெற்கு ரயில்வே பயணிகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு அலுவலக வேலை நேரத்தில் கூடுதலாக ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெரிவித்தது. இதனையடுத்து ஏசி மின்சார ரயில் கால அட்டவணை இன்று ( மே 2 ஆம் தேதி) முதல் மாற்றப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு அலுவல் வேலைகளில் பயணிகள் இந்த ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட புதிய அட்டவணை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய அட்டவணை
புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைக்கான அட்டவணை வருமாறு:
1. காலை 6.50 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு காலை 7.35 மணிக்கு சென்றடையும்.
2. காலை 7.50 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு காலை 9.25 மணிக்கு சென்றடையும்.
3. காலை 9.41 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 10.36 மணிக்கு சென்றடையும்.
4. மதியம் 1 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு மதியம் 1.55 மணிக்கு சென்றடையும்.
5. மதியம் 2.30 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு மாலை 4 மணிக்கு சென்றடையும்.
6. மாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு மாலை 6 மணிக்கு சென்றடையும்.
7. மாலை 6.17 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு இரவு 7.50 மணிக்கு சென்றடையும்.
8. இரவு 8.10 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு இரவு 8.50 மணிக்கு வந்தடையும்.
இன்று முதல் இயக்கம்
இந்த புதிய அட்டவணை இன்று முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு - சென்னை கோட்டை - சென்னை பூங்கா - எழும்பூர் - மாம்பலம் - கிண்டி - செண்ட் தாமஸ் மவுண்ட் - திரிசூலம் - தாம்பரம் - பெருங்களத்தூர் - கூடுவாஞ்சேரி - பொத்தேரி - சிங்கப்பெருமாள் கோயில் - பரனூர் - செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் தான் இந்த ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்கள் நின்று செல்லும்.
அதே நேரத்தில் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயிலுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏசி ரயில்கள் இதுவரை தினசரி 6 முறை இயக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் 8 முறைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications