ரூல்ஸ் எல்லாம் மாறுது.. இன்று முதல் வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு பிரச்சனை.. ரயில் பயணிகளுக்கும் அப்டேட்
சென்னை: இந்த ஆண்டு பிறந்து 2 மாதங்கள் முடிவடைந்துவிட்டன. இன்று மார்ச் மாதம் தொடங்கி உள்ளது. மார்ச் 1ஆம் தேதியான இன்று முதல் நாட்டில் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த மாற்றங்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப திட்டமிடுவது நல்லது. அதுபற்றிப் பார்க்கலாம்.
ரயில் பயணிகள் கவனிங்க
அடிக்கடி ரயில்களின் பயணம் செய்யக்கூடியவர்களாக இருந்தால் இதை கவனமாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மார்ச் 1ஆம் தேதியான இன்று மிக முக்கியமான ஒரு மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. அதாவது இனி யுடிஎஸ் செயலி செயல்படாது. மார்ச் 1ஆம் தேதியிலிருந்து பயணிகள் அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை எடுப்பதற்கு யுடிஎஸ் செயலியை பயன்படுத்த முடியாது அதற்கு மாற்றாக ரயில் ஒன் (Rail One) செயலியை மட்டுமே பயன்படுத்த முடியும்.

சிம் கார்டு பைண்டிங்
மத்திய அரசின் புதிய சிம்கார்டு பைண்டிங் விதிமுறை மார்ச் 1 ஆம் தேதியான இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது உங்களுடைய தொலைபேசியில் இருந்து சிம் கார்டை அகற்றி விட்டால் whatsapp போன்ற செயலிகள் வேலை செய்யாது.
சர்வதேச அளவில் 'Verify Once' என்ற முறையின் கீழ் பயனர்களை சரிபார்த்து வருகிறது வாட்ஸ்அப். அந்த வகையில் முதல் முறையாக ஒரு எண்ணில் வாட்ஸ்அப் கணக்கு தொடங்கும்போது மட்டும் அந்த எண்ணின் சிம் கார்டு, அந்த போனில் இருக்க வேண்டும். அதன் பின்னர் சிம் கார்டை அந்த போனில் இருந்து அகற்றினாலும் வாட்ஸ்அப் வழக்கம்போல செயல்படும்.
வாட்ஸ் அப் சேவை
ஆனால், சிம் பைண்டிங் விதி அதை மாற்றி உள்ளது. தொலைத்தொடர்புத் துறை கட்டமைத்துள்ள விதிகளின் படி, சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் கணக்கு பயன்படுத்தப்படும் பிரதான போனில் அந்த எண்ணுக்கான சிம் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். அதோடு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை அந்த போனில் சிம் கார்டு உள்ளதா என்பதை வாட்ஸ்அப் கண்டறியும்.
ஒருவேளை அந்த போனில் சிம் கார்டு நீக்கப்பட்டு இருந்தாலோ, மாற்றி இருந்தாலோ, டி-ஆக்டிவேட் செய்திருந்தாலோ வாட்ஸ்அப் கணக்கு இயங்காது. மீண்டும் அசல் சிம் கார்டை போனில் சேர்த்து, மீண்டும் சரிபார்த்த பிறகுதான் வழக்கம் போல இயங்கும். டிஜிட்டல் சார்ந்த மோசடிகளை தடுக்க இந்த நடைமுறையை அரசு கொண்டுவந்துள்ளது.
சிம் பைண்டிங் விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. வாட்ஸ் அப் வெப் சேவைகள் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே லாக் அவுட் ஆகிவிடும். அதாவது வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப்பில் பயன்படுத்தும் போது 6 மணி நேரத்துக்கு ஒருமுறை தானாகவே லாக்-அவுட் ஆகும். அதன் பின்னர் மீண்டும் அதை அக்சஸ் செய்ய சிம் கார்டு உள்ள பிரைமரி போனில் இருந்து கணக்கை லிங்க் செய்ய வேண்டும். போலி எண்கள் மற்றும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.29.50 உயர்ந்து ரூ.1929 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
வாடகை வீடு புதிய விதிகள்
2025-2026 ஆம் ஆண்டிற்கான புதிய வாடகை விதிகளின்படி, மார்ச் 1 ஆ தேதியான இன்று முதல் புதிய ஒப்பந்தங்களில் சில மாற்றங்கள் வருகின்றன. அதாவது வாடகை ஒப்பந்தங்களின் டிஜிட்டல் பதிவு இப்போது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செக்யூரிட்டி டெபாசிட் ஆனது அதிகபட்சம் இரண்டு மாத வாடகையாக மட்டுமே இருக்கும். மேலும், வீட்டு உரிமையாளர்கள் 24 மணி நேரத்துக்கு முன் அறிவிப்பு இல்லாமல் வீட்டிற்குள் நுழைவது தடை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications