அதிகார மமதையில் மிதக்கும் அமைச்சர்கள்! வாய்ப்பூட்டு கடிவாளம் போடுங்கள்..முதல்வருக்கு பறந்த கோரிக்கை!
சென்னை : சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதையே வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழக அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டும், கடிவாளமும் போட்டு அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி செயலாளர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்," விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் அடுத்த சித்தலிங்க மடம் கிராமத்தின் எல்லையை பிரித்து எடப்பாளையம் தனி ஊராட்சியோடு சேர்க்கும் பணிகளை கண்டித்து சித்தலிங்க மடம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அங்கே போராடிய பொதுமக்களில் ஒருவரைப் பார்த்து தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தி திட்டியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அமைச்சர் பொன்முடி
பொறுப்புள்ள அமைச்சரான திரு. பொன்முடி அவர்கள் பொறுப்பற்ற வகையில் சாமானிய மக்களை பார்த்து அவ்வாறு திட்டியதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் ஏற்கனவே இதே விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவின் போது ஒன்றியக் குழு தலைவரை பார்த்து "ஏம்மா...நீ எஸ்.சி தானே...!" என தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றால் தீண்டத்தகாவர் என்கிற ரீதியில் சாதியை குறிப்பிட்டு பொது நிகழ்வில் கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியவர்.

தகுதியற்றவர்
மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை வைத்து "பெண்கள் அரசு பேருந்தில் ஓசி பயணம்" செல்வதாக கூறி இலவச பேருந்து சேவையை பயன்படுத்தும் மகளிரையும் இழிவாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தற்போது போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் ஒருவரை பார்த்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பதன் மூலம் பொன்முடி அவர்கள் பொறுப்புமிக்க அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறார்.

ஏற்றுக் கொள்ள முடியாது
பொதுமக்கள் வரிப்பணத்தில், குளு, குளு வசதி கொண்ட, தேசிய கொடி பறக்க, சைரன் பொறுத்திய வாகனத்தில் பயணித்தால் வாக்களித்த பொதுமக்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்கிற அதிகார மமதையோடு உலா வரும் திரு. பொன்முடி போன்ற திமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக இது போன்று இழிவாக பேசுவதை மனச்சாட்சி உள்ள எவராலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.

வாய்ப்பூட்டும், கடிவாளமும்
ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தாங்கள் வானத்தில் இருந்து வந்துதித்த தேவதூதன் என்கிற எண்ணத்தோடு, தாங்கள் தான் சர்வ வல்லமை பொருந்தியவர்கள் என்கிற எண்ணமும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி போன்ற திமுக அமைச்சர்களின் ஆள்மனதில் இருக்குமானால் அதனை அவர்கள் உடனடியாக மாற்றிக் கொண்டு, தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் எனவும், தொடர்ந்து பொதுமக்களை கிள்ளுக்கீரையாக நினைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதையே வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழக அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டும், கடிவாளமும் போட்டு அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்துகிறோம்.












Click it and Unblock the Notifications