"மாநில உரிமைகளைக் காக்க திமுக என்றும் துணை நிற்கும்.." மம்தாவிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: பாஜக அல்லாத மாநிலங்களின் ஆளுநர்களின் அரசியலமைப்புச் சட்ட மீறல்கள் குறித்து மேற்கு வங்க ஆளுநர் மம்தா, தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் தனது கவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் கடந்த சில மாதங்களாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
குறிப்பாக, மம்தா பானர்ஜி 3ஆவது முறையாக வென்று ஆட்சி அமைத்த பின்னர், ஆளுநரை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்தே வருகின்றனர்.

மேற்கு வங்கம்
மேற்கு வங்க அரசு அனுப்பும் கோப்புகளில் ஆளுநர் ஜெகதீப் தங்கர் கையெழுத்திடுவதில்லை என அம்மாநில அமைச்சர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஒரு கட்டத்தில் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்குவது தொடர்பாகக் கூட ஆலோசித்து வருவதாகக் கூறி அம்மாநில கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும், விரைவில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் ஜகதீப் தங்கருக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் அரசு தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

முடக்கம்
இந்தச் சூழலில் தான் மேற்கு வங்க சட்டசபை பிப்ரவரி 12 முதல் காலவரையின்றி முடக்குவதாக ஆளுநர் ஜெகதீப் தங்கர் நேற்று ட்வீட் செய்திருந்தார். "அரசியலமைப்புச் சட்டத்தின் 174வது பிரிவின் பிரிவு (a)ன் உட்பிரிவு (2) மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நான் மேற்கு வங்காள சட்டமன்றத்தைப் பிப்ரவரி 12, 2022 முதல் முடக்குகிறேன்" என அவர் தனது ட்விட்டரில் ஆளுநர் ஜெகதீப் தங்கர் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு முதல்வர்
பொதுவாக சபாநயகர் பரிந்துரை அடிப்படையில் தான் சட்டசபை இது போலக் காலவரையின்றி முடக்கப்படும். ஆனால், ஆளுநர் ஜெகதீப் தங்கர் தனிச்சையாக இப்படிச் செயல்பட்டு வருவதாகப் பலரும் சாடினர். இது தொடர்பாகத் தமிழ்நாடு முதல்வர், "மேற்கு வங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத் தலைமையில் இருப்பவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்" என்று சாடியிருந்தார்.

ஆளுநர் விளக்கம்
இதனிடையே மேற்கு வங்க சட்டப்பேரவை விவகாரத்தில் ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளில் உண்மையில்லை என்று மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது மேற்கு வங்க முதல்வர் அலுவலகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே, சட்டசபையின் நடப்புக் கூட்டத் தொடரை முடித்து வைத்து உத்தரவிடப்பட்டது என்று அவர் ட்வீட் செய்திருந்தார். இந்தச் சூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைப்பேசி வழியாக உரையாடியனர்.

மாநில உரிமைகளைக் காக்கத் துணை நிற்கும்
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பக்கத்தில், "பாஜக அல்லாத மாநிலங்களின் ஆளுநர்களின் அரசியலமைப்புச் சட்ட மீறல்கள் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து தீதீ மம்தா பானர்ஜி தனது கவலையையும் வேதனையையும் என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட்டத்தை நடத்துவது குறித்தும் அவர் பரிந்துரை அளித்தார், மாநில உரிமைகளைக் காக்க திமுக என்றும் துணை நிற்கும். விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாடு நடைபெறும்." என்று அவர் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications