மாம்பலம் லாட்ஜ் பரிமளா! சென்னை போலீஸ் வந்ததுமே எகிறி தப்பி.. மலேசியா ரூ.200 கள்ள நோட்டு இங்கே எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலேசிய பெண் ஒருவர் 200, 100 ரூபாய் கள்ள நோட்டு விவகாரத்தில் சென்னை மாம்பலத்தில் கைதாகி உள்ளார். சென்னையில் விடுதி ஒன்றில் அரங்கேறிய அதிரடி சோதனை, சர்வதேச அளவில் நீளும் ஒரு பிரம்மாண்ட கள்ளநோட்டு நெட்வொர்க்கையே இப்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில், மலேசியாவுக்கு தப்பி ஓடிய பரிமளாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு பிரபல லாட்ஜில் கள்ளநோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் அங்கு நடத்திய சோதனையில், பதுக்கப்பட்டிருந்த 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டன.

Mambalam Parimala Chennai Police Fake Currency Malaysia

மாம்பலம் லாட்ஜ்

அத்துடன், இந்த செயலில் ஈடுபட்ட திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 37 வயதான டிராவல்ஸ் அதிபர் ஷபீக் ரகுமான் என்பவரும் கைதானார்.. அவரிடம் நடத்திய சோதனையில், போலியான 11 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகளுடன் சேர்த்து, 11.21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசல் 500 ரூபாய் நோட்டுகளும், சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள யூரோ கரன்சி நோட்டுகளும் பிடிபட்டன.

கைது செய்யப்பட்ட டிராவல்ஸ் அதிபர் ஷபீக்ரகுமானிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரை போலீசார் அதிரடியாக வளைத்து பிடித்தனர். அவரிடமிருந்து கணக்கில் வராத 22.79 லட்சம் ரூபாய் அசல் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் இந்த இருவரிடமிருந்தும் ஒட்டுமொத்தமாக 34 லட்சம் ரூபாய் அசல் இந்திய நாணயங்கள் கைப்பற்றப்பட்டன.

மலேசியா கள்ள நோட்டு

கள்ள நோட்டு விவகாரத்தில் இவர்கள் 2 பேரும் ஈடுபட்டிருப்பதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.. ஆனால், கைதான ரவிச்சந்திரனின் பின்னணியை ஆராய்ந்தபோதுதான், பெரிய அதிர்ச்சி போலீசாருக்கு காத்திருந்தது..

அவர் சில காலம் மலேசியாவில் தங்கி வேலை பார்த்தாராம்.. அப்போது அங்குள்ள ஒரு சர்வதேச கள்ளநோட்டு தயாரிக்கும் கும்பலுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள் அனைத்தும் சாதாரணமானவை கிடையாதாம்.. அவை அசல் 500 ரூபாய் நோட்டுகளில் உள்ள செக்யூரிட்டி அம்சங்களை அப்படியே கொண்டு மலேசியாவில் அதிநவீன இயந்திரங்கள் மூலம் அச்சடிக்கப்பட்டவை ஆகும்.


ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்

இதில் 3வது ட்விஸ்ட் என்னவென்றால், இந்த கள்ளநோட்டுகளை மலேசியாவிலிருந்து தமிழகத்திற்கு கடத்தி வரும் முக்கிய பொறுப்பை மலேசியாவைச் சேர்ந்த பரிமளா மற்றும் புவனேஸ்வரி ஆகிய இரு பெண்கள் கவனித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேருமே சென்னை மாம்பலத்தில் உள்ள ஒரு லாட்ஜில் ரகசியமாக தங்கியிருப்பதை அறிந்த போலீசார், அந்த இடத்தையே சுற்றி வளைத்து விட்டார்கள்.

போலீசார் வரப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த பரிமளா அங்கிருந்து எகிறி தப்பியோடிவிட, 48 வயதான புவனேஸ்வரி என்ற மலேசிய பெண் மட்டும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

சிக்கிய புவனேஸ்வரி

கைது செய்யப்பட்ட புவனேஸ்வரியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த கள்ளநோட்டுகள் அனைத்தும் மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு விமானம் மூலமாகவே கடத்தி வரப்பட்டது என்ற 4வது ட்விஸ்ட் அம்பலமானது.. பாதுகாப்பு வளையங்களை மீறி விமானத்தில் இவை எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது தான் மிகப்பெரிய ஆச்சரியத்தை போலீசுக்கு கிளப்பி உள்ளது.. விசாரணையும் தீவிரமடைந்துள்ளது.

இந்த கும்பல் இதுவரை சுமார் 1.10 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை மலேசியாவிலிருந்து தமிழகத்திற்குள் கொண்டு வந்திருக்கலாம் என்று போலீசார் பலமாக சந்தேகிக்கிறார்கள். அதில் ஏற்கனவே 34 லட்சம் ரூபாய் வரையிலான கள்ளநோட்டுகளை இவர்கள் பொதுமக்களின் புழக்கத்தில் விட்டுவிட்டதும், அதற்கு மாற்றாகவே இவர்களிடம் இவ்வளவு பெரிய தொகையிலான அசல் நோட்டுகள் சிக்கியதும் அம்பலமாகியுள்ளது. மீதமுள்ள கள்ளநோட்டுகள் எங்கு பதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தேடுதல் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மலேசியா பரிமளா எங்கே

போலீசார் தற்போது செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில், "கைதானவர்களிடமிருந்து 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமல்லாமல், போலியான 100 மற்றும் 200 ரூபாய் கள்ளநோட்டுகளும் சிக்கியுள்ளன. இந்த கும்பலிடம் இருந்து பல்வேறு நபர்களின் பெயர்களில் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 16 பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய பரிமளா ஏற்கனவே விமானம் மூலம் மலேசியாவிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என கருதப்படுவதால், அவரைப் பிடிக்க சர்வதேச போலீசாரின் (Interpol) ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுத் தொடர்புகளும், கோடிக்கணக்கான ரூபாய் கள்ளநோட்டு புழக்கமும் உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை திருவல்லிக்கேணி போலீசார் விரைவில் சி.பி.சி.ஐ.டி (CBCID) பிரிவுக்கு மாற்ற பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.

கள்ளநோட்டுகளை மலேசியாவில் இருந்து விமானத்தில் எப்படி கொண்டு வந்தார்கள்? என்பதெல்லாம் பரிமளாவுக்குத்தான் நன்றாக தெரியுமாம். அதனால்தான் பரிமளாவுக்கு மலேசியாவில் வலை வீசப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+