சொந்த வாகனத்தையே திருடி.. நுங்கம்பாக்கம் போலீசுக்கு விபூதி அடிக்க போய்.. கடைசியில் அசிங்கமா போச்சு
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீசார் மதுபோதையில் ஓட்டிவந்ததாக வாகனத்தை பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில் காவல் நிலையத்திலேயே போலீசாருக்கு தெரியாமல் தனது இருசக்கர வாகனத்தை வேறு சாவி போட்டு தூக்கி சென்றுள்ளார் போதை ஆசாமி. எனினும் கண்காணிப்பு கேமரா காட்சியால் சிக்கி உள்ளார்.
சென்னையில் போக்குவரத்து போலீசார் பொதுவாக சனி மற்றும் ஞாயிறு உள்பட வாரஇறுதி நாட்களில் மதுபோதையில் செல்வோரால் விபத்து ஏற்படுவதை தடுக்க தீவிரமாக வாகன சோதனை நடத்துவார்கள். இந்நிலையில் சுதந்திர தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டியும் முன்பைவிட வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். இதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

அப்படித்தான் சனிக்கிழமை நள்ளிரவு நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீசார் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் ஹேடோஸ் சாலை சந்திப்பில் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டார்கள்,.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மிகவும் தள்ளாடியபடி வாகனத்தை ஓட்டி வந்தார். அவரை மடக்கி பிடித்த போலீசார் விசாரித்தனர். அவர் சூளைமேட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருண் என்பது தெரியவந்தது. அவர் மதுபோதையில் உள்ளாரா என சோதனைக்கு உட்படுத்தினர். அவர் மது அருந்தி இருப்பதாக காட்டியது. இதையடுத்து அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
அருணின் இருசக்கர வாகனத்தை நுங்கம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். தனது பைக்கை பறிமுதல் செய்ததால் பரிதவித்து போன அருண், எப்படியாவது போலீசுக்கு தெரியாமல் வாகனத்தை எடுத்து கொண்டு எஸ்கேப் ஆக திட்டமிட்டார். போலீசார் நடமாட்டம் இல்லாத நேரத்தில் காவல் நிலைய வளாகத்திற்குள் வந்த அருண், தனது மற்றொரு சாவியை போட்டு, அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்தநிலையில் பறிமுதல் செய்து வைத்திருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு போலீசார் திடுக்கிட்டனர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வாகனத்தின் உரிமையாளரான அருண் இருசக்கர வாகனத்தை போலீஸ் ஸ்டேஷன் புகுந்து திருடிச் சென்றது தெரியவந்தது.
முதலில் 10000 ரூபாய் தான் நுங்கம்பாக்கம் போலீசார் அபராதம் விதித்து இருந்தனர். அதை கட்டிவிட்டு வாகனத்தை எடுத்து சென்றிருந்திருக்கலாம். ஆனால் இப்போது சொந்த வாகனத்தையே போலீஸ் ஸ்டேஷனில் திருடியதால், திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருணை போலீசார் கைது செய்தனர். வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


Click it and Unblock the Notifications
