திருவள்ளூரில் அரசு ஊழியர்களுக்கு கேக் வழங்கி நபர்.. சாப்பிட்ட பின் தெரியவந்த ட்விஸ்ட்
திருவள்ளூர்: மோசமான சாலைகளை சீரமைக்க வைக்க அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளை வைத்து அழுத்தம் கொடுப்பார்கள் மக்கள். அதேநேரம் அவர்களுமே சில நேரங்களில் போராட்டங்களை மேற்கொள்வார்கள். அப்படி போராடினால் அதிகாரிகள் சமாதானம் செய்ய வரும் போது தான், சாலைக்கு சில நேரம் விடிவு பிறக்கும். இந்த சூழலில் சாலையைச் சீரமைப்பதில் மெத்தனமாக செயல்பட்டதாக கூறி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு கேக் வெட்டி வழங்கி ஒருவர் வித்தியாசமான முறையில் போராடி உள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
உங்கள் ஊருக்கு முதல்வர் வரப்போகிறார் என்றால், உங்கள் ஊர் சாலைகள் ஒரே நாளிர் தரமானதாக மாறும். தூய்மை பணிகள் அருமையாக நடக்கும். ஒரு சிறு பள்ளம் கூட இருக்காது. எல்லாமே சிறப்பாக இருக்கும். அந்த அளவிற்கு உடனே மாற்றிவிடுவார்கள் அதிகாரிகள். ஆனால் அதே சாலையை சரி செய்ய சொல்லி பல மாதங்கள் கோரிக்கை வைத்தாலும், இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை அல்லது டெண்டர் விட்டிருக்கிறோம் விரைவில் பணிகள் நடைபெறும் என ஏதாவது ஒரு சாக்கு சொல்வார்கள்.

ஆனால் உண்மையில் அதிகாரிகள் நினைத்தால், விரைவாகவே பணிகளை முடித்துவிட முடியும். சாமானிய மக்கள் தரும் அழுத்தத்தைவிட, அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தால் பணிகள் உடனே நடைபெறும். எந்த ஊரில் சாலை சரியில்லை என்றாலும், அதிகாரிகளால் உடனே நடவடிக்கை எடுக்க முடியும். எனவே அதிகாரிகளின் கவனத்திற்கு சாலையின் நிலையை கொண்டு செல்ல வேண்டும். அப்படி கவனத்தை ஈர்க்கவே மக்கள் போராடுவது, மனு அளிப்பது, பேனர் வைப்பது போன்ற செயல்களை செய்கிறார்கள். திருவள்ளூரில் வித்தியாசமான முறையில் ஒருவர் போராடி உள்ளார்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சியில் உள்ள பவுண்டு சாலை போக்குவரத்திற்கு சற்றும் லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சாலையை சீரமைக்க கோரி அந்தப் பகுதி மக்கள் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த சாலையின் ஓரத்தில், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இந்தச் சாலையில் சென்றால் இலவசமாக கை, கால்களை உடைத்து கொள்ளலாம் என்று நூதன முறையில் பேனர் வைத்திருந்தனர். அந்த வீடியோ வைரலான நிலையில் அரசு அதிகாரிகள் உடனடியாக சாலை அமைப்பதற்கு அளவிட்டு சென்றார்கள். 2 மாதங்கள் ஆகியும் இதுவரை அந்தச் சாலையை சீரமைக்காதது குறித்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே சாலை சீரமைக்கப்படாததால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று திடீரென கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று நுழைவு வாயில் முன்பு நின்று அதிகாரிகளுக்கு நன்றி என பெயரிட்டு கேக்கை வெட்டினர். மேலும் வெட்டப்பட்ட அந்த கேக்குகளின் துண்டுகளை அலுவலகத்தில் இருந்த ஊழியர்களுக்கு வாலிபர்கள் வழங்கிய போது எதற்காக கேக் கொடுக்கின்றனர் என்பது கூட தெரியாமல் அவர்கள் கேக்கை வாங்கி சாப்பிட்டுள்ளார்கள்.
அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கை நூதன முறையில் சுட்டிக்காட்டவே கேக் வெட்டியதாகவும் உடனடியாக அரசு அதிகாரிகள் சிதலமடைந்த சாலையை காலதாமதம் செய்யாமல் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாலிபர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications
