"சூழலுக்கேற்ப வாழனும் டா".. 3rd AC ரயில் டிக்கெட்டால் கோபமான மகனுக்கு பாடம் புகட்டிய தந்தை! வீடியோ
சென்னை: வழக்கமாக ரயிலில் முதல் வகுப்பு ஏசி அல்லது 2வது வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிக்கும் சிறுவன், தீபாவளி சமயத்தில் கூட்ட நெரிசலால் 3வது வகுப்பு ஏசி பெட்டியில் பயணித்தான். அப்போது அவன் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் அவரது தந்தை அந்த சிறுவனுக்கு ரயிலிலேயே பாடம் புகட்டியது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இன்ஸ்டாகிராமில் Naveen 1980 என்ற பெயர் கொண்ட அக்கவுண்ட்டில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் டீசர்ட், பேண்ட், காலில் ஷு அணிந்த ஒரு சிறுவன் நடந்து செல்கிறார். அவரை பின்தொடர்ந்து ஒருவர் வீடியோ எடுத்து செல்கிறார்.

அந்த சிறுவன் முன்பதிவு செய்யாத பெட்டியில் செல்கிறார். அதில் ஒரே இருக்கையில் 5 பேர் வரை அமர்ந்துள்ளனர். மேலும் பொரட்கள் வைக்கும் இடத்திலும் பலர் அமர்ந்துள்ளார். கழிவறை செல்லும் இடத்திலும் பலரும் படுத்து தூங்குகின்றனர். இப்படியாக அந்த வீடியோ முடிகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 3AC பெட்டியில் பயணம் செய்வது குறித்து சிறுவன் அதிருப்தி தெரிவித்த நிலையில் அவனுக்கு முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்தால் எப்படி இருக்கும்? என்பதை தந்தை உணர வைத்தார். இதுதொடர்பாக அவரே அந்த வீடியோவில் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்.
அதில் சிறுவனின் தந்தை, 'எனது மகன் வழக்கமாக முதல் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு ஏசியிலேயே பயணம் செய்பவன். தீபாவளி நேரத்தில் அவசர பயணம் செய்ய வேண்டியிருந்ததால் உயர் வகுப்பு பெட்டிகளில் டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் 3AC பெட்டியில் அழைத்து சென்றேன். ஆனால் அந்த பயணத்தை அவன் ரசிக்கவில்லை. அதிருப்தி தெரிவித்தான்.
இதனால் நான் அவனை முன்பதிவில்லா பெட்டிக்கு அழைத்து சென்றேன். அவசர காலங்களில், வசதியை விட அந்த சூழலுக்கு முன்னுரிமை அளிப்பது தவறில்லை என்பதை அவன் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். நாம் அனைவரும் சமமானவர்களே, இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு. இது வெறும் சூழல் மட்டுமே. காலமும் கொள்கைகளும் சிலரை பின்தங்கிய நிலையில் வைத்திருக்கலாம். ஆனால் அவர்களில் பலரும் நம்மை விட மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை உணர வைததேன்.
ஒவ்வொரு மனிதரும் ஒருவரை விட வசதியானவராகவும், மற்றொருவரை விட வசதி குறைந்தவராகவும் இருக்கிறார்கள். இதனால் யாரிடமும் மேலாதிக்க உணர்வையோ அல்லது தாழ்வு மனப்பான்மையையோ வளர்த்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுரை வழங்கினேன்.
300 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் செல்வந்தர்களாக இருந்தனர். அதே சமயம் தொழிலாளர் வர்க்கத்தினர் பணியாளர்களை போல நடத்தப்பட்டனர். காலப்போக்கில் கொள்கைகள் மாறும்போது 'செல்வந்தர்' மற்றும் 'ஏழை' என்று வரையறுக்கும் முறையும் மாறுகிறது. இன்னும் 100 ஆண்டுகள் கழித்து நிலைமை எப்படி இருக்கும்? என்று நமக்கு தெரியாது.
இந்த உலகில் ஒவ்வொருவரும் சமமான பங்களிப்பை வழங்குகிறார்கள். வசதி படைத்தவர்கள் சிலநேரங்களில் அர்த்தமற்ற விஷயங்களை பேசுவதையும், அதே சமயம் கிராமப்புற குழந்தைகள் மிகவும் புத்திசாலித்தனமாக பேசுவதையும் நான் பார்த்திருக்கிறேன்'' என கூறியுள்ளார்.
இந்த பதிவும், 3AC பயணத்தில் அதிருப்தியை வெளிப்படுத்திய மகனுக்கு சூழலுக்கு ஏற்ப வாழ வேண்டும் என்று பாடம் எடுத்த முறையும் பலரையும் கவர்ந்துள்ளது. இதனால் சிறுவனின் தந்தைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
