முத்த மழையா? கண்ணுல ரத்த மழை வருது! இப்படி பண்ணிட்டீங்களே மணி.. வீடியோ வெர்ஷனை வெளுக்கும் ரசிகர்கள்
சென்னை: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் படத்தை வெளுத்து வருகின்றனர் ரசிகர்கள். படத்தில் ஒரே ஆறுதல் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்த 'முத்த மழை' பாடல் மட்டும் தான். ஆடியோ ரிலீஸின் போது சின்மயி வெர்ஷன் தான் பெஸ்ட், தீ வெர்ஷன் தான் பெஸ்ட் என ரசிகர்கள் ஆன்லைன் போரில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் படத்தில் இப்பாடல் இடம் பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அதன் வீடியோ வெர்ஷன் வெளியாகியிருக்கும் நிலையில், பாடலை வைக்காததே நல்லது தான் எனவும், மேடையில் சின்மயி பாடியதையே படத்தில் வைத்திருக்கலாம் என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட் வரை அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல நடிப்பு பல்கலைக்கழகம் என்றால் தற்போதைக்கு கமலஹாசன் தான். இருவரும் இணைந்த நாயகன் திரைப்படம் இன்று வரை இளம் இயக்குனர்களுக்கு ஒரு பாட புத்தகம் போலவே என்பார்கள்.
அந்த வகையில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் படத்தில் இந்த கூட்டணி இணையும் என்ற அறிவிப்பே பலரது எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. கூடுதலாக சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் தக் லைப் படத்தில் இணைகிறார்கள் என்ற அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படத்துக்கு இசையமைப்பாளராக ஏஆர் ரகுமானும் இணைந்தார். அவரது இசையமைப்பில் வெளியான பாடல்களும், ட்ரெய்லர், டீசர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடலும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. இந்த நிலையில் கர்நாடகா தவிர்த்து உலகம் முழுவதும் நேற்று தக் லைப் திரைப்படம் வெளியானது.
3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியான நிலையில் படம் எதிர்மறை விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதுவரை சமூக வலைதளங்களில் ஒரு விமர்சனம் கூட தக் லைஃப் படத்திற்கு ஆதரவாக இல்லை. அந்த அளவுக்கு படத்தை அடித்து துவைத்து எடுத்து வருகின்றனர் ரசிகர்கள். படம் வெளியாகி 9 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை 50 கோடி ரூபாய் வசூலை தொடவே போராடுவதாக சொல்லப்படுகிறது. இதனால் போட்ட முதலீடு கிடைக்குமா என்பதே கேள்விக் குறிதான் என்கின்றனர் சினிமா துறையினர்.
இதற்கிடையே படத்தில் இடம் பெற்ற 'முத்த மழை' பாடலின் வீடியோ வெர்ஷன் யூட்யூபில் வெளியாகியுள்ளது. அதனையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள். 'முத்த மழை' பாடலை திரைப்படத்தில் உண்மையாக பாடியிருந்தது பாடகி தீ தான். இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்ள முடியாத நிலையில் தெலுங்கில் இந்த பாடலை பாடியிருந்த சின்மயி தமிழ் வெர்ஷனை மேடையில் பாடி இருந்தார் இதை அடுத்து தீ வெர்ஷன் நன்றாக இருக்கிறது, சின்மயி வெர்ஷன் தான் நன்றாக இருக்கிறது என ஆன்லைனில் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
இது ஒரு புறம் இருக்க படத்தின் ஆல்பத்திலும் சின்மயி வெர்ஷன் சேர்க்கப்பட்டது. இதனால் படத்தில் யார் பாடிய பாடல் இடம் பெறும் என ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர். ஆனால் படம் வெளியான போது முத்த மழை பாடலே இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பாடலை யூட்யூபிலாவது வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் நேற்று ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முத்த மழை பாடலின் வீடியோ வெர்சன் வெளியானது.
மேடையில் திரிஷா பாடுவது போல அந்த பாடல் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக பாடலின் மேக்கிங்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள். எப்பேர்ப்பட்ட பாடலை மணிரத்னம் இப்படி வீடியோ எடுத்து வைத்திருக்கிறார் என கடுமையாக விமர்சிக்கின்றனர். மேலும் எந்தவித சலனமும் இன்றி திரிஷா மேடையில் அங்கும் இங்கும் மைக்கை வைத்துக்கொண்டு நடக்கிறார் எனவும், கடுமையாக விமர்சித்துள்ளனர். மேடையில் பாடிய சின்மயி கூட அருமையாக எக்ஸ்பிரஷன் கொடுத்த நிலையில் திரிஷா என்னமோ ஏதோ ஒன்று இருப்பதாக கடுமையாக விமர்சிக்கின்றனர். படத்தின் ஒரே ஆறுதல் ஏஆர் ரகுமான் மட்டும்தான் எனவும் மற்ற அனைவரும் சொதப்பிவிட்டார்கள் என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications