பவருக்கு வந்த மாணிக்கம் தாகூர்.. ஸ்வீட் பாக்ஸுடன் ஐவர் குழு? சத்தியமூர்த்தி பவனில் என்ன நடக்குது?
சென்னை: கோஷ்டி பூசல்களுக்கு பெயர் போனது தமிழக காங்கிரஸ் கட்சி.. இப்போது தமிழ்நாட்டில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், கட்சிக்குள்ளேயே இப்போது அதிகாரப் பகிர்வு மற்றும் நியமனங்கள் தொடர்பான சலசலப்புகள் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளன... சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்களை உலுக்கும் இந்த விவகாரம் குறித்த சில எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
மாணிக்கம் தாகூரை பொறுத்தவரையில், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் மிக நம்பிக்கைக்குரியவராக டெல்லி வட்டாரத்தில் பார்க்கப்படுபவர்.

மாணவர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் காலம் தொட்டே கட்சிக்காக உழைத்து வரும் இவர், நாடாளுமன்ற காங்கிரஸ் கொறடா மற்றும் ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் எனப் பல தேசிய அளவிலான பொறுப்புகளைக் கையாண்ட அனுபவம் மிக்கவர்..
தமிழக காங்கிரஸ்
அதனால்தான், மாநில தலைமை பொறுப்பை, டெல்லி மேலிடம் இவரிடம் ஒப்படைத்துள்ளது.. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாணிக்கம் தாக்கூர் பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் அதிகார மையங்கள் மொத்தாகவே மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை காலத்தில் ஓரங்கட்டப்பட்டிருந்த மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர்களும் நண்பர்களும் தற்போது கட்சியின் முழுமையான கட்டுப்பாட்டை தங்கள் கைகளில் எடுத்து விட்டார்களாம்.. இதனால் பல வருட காலமாகவே கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் தலைவர்களின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு ஓரம் கட்டப்பட்டு வருவது காங்கிரஸ் கட்சிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணிக்கம் தாகூர்
குறிப்பாக, தனக்கு மிக நெருக்கமான 5 பேர் கொண்ட நண்பர்கள் குழுவிடம் மட்டுமே மாநில காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் மாணிக்கம் தாகூர் ஒப்படைத்துள்ளாராம்.. அந்த ஐவர் குழுவின் ஆட்டம் காங்கிரஸ் நிர்வாகிகளை பதம் பார்த்து வருகிறது. குறிப்பாக, மாநில நிர்வாகிகள் நியமனம் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதற்கான லிஸ்ட் தயாரிக்க மாணிக்கம் தாக்கூர், ஐவர் குழுவுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில், துணைத்தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படவுள்ளன. அந்த வகையில், மாநில நிர்வாகிகள் நியமனங்கள் விற்கப்படுவதாக தகவல்கள் கசிகின்றன. பதவிகளின் தன்மைக்கேற்ப ஸ்வீட் பாக்ஸ்களின் எண்ணிக்கை முன் வைக்கப்படுகிறதாம்.
பவர்ஃபுல் ஐவர் குழு
தற்போது ஆளும் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றிருப்பதாலும், இந்த மாநில நிர்வாகி பதவிகளைப் பணம் கொடுத்து வாங்கினால் அரசாங்கத்தில் தங்களது காரியங்களை எளிதாக சாதித்துக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் பல கதர்சட்டைகள் களம் இறங்கியுள்ளனராம்.
ஐவர் குழு கேட்பதாகக் கூறப்படும் அந்த ஸ்வீட் பாக்ஸ்களை கொடுத்து பதவியை கைப்பற்ற துடிக்கும் இந்த போட்டியானது, காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் இந்த நியமன பட்டியல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்போது, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துக் கிளம்பும் என்றும், கட்சியை இரண்டாக பிளக்கும் என்றும் கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே எச்சரித்து வருகிறார்களாம்...!!
- சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
