மணிப்பூர் கொலைகள்- களத்தில் திமுக! சென்னையில் இன்று கனிமொழி போராட்டம்- நாளை தமிழ்நாடு முழுவதும்!
சென்னை: மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக மகளிரணியினர் இன்று கண்டனப் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
மணிப்பூரில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே 3 மாதங்களாக மோதல்கள் நீடித்து வருகிறது. இம்மோதல்களில் குக்கி இன மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பது அம்பலமாகி வருகிறது. மணிப்பூரில் குக்கி இன பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு மைத்தேயி இன கும்பலால் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ உலகின் மனசாட்சியை உறைய வைத்துக் கொண்டிருக்கிறது.

மணிப்பூரில் நிகழ்ந்து வரும் இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குக்கிராமங்களிலும் மணிப்பூர் படுகொலைகளைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மணிப்பூர் படுகொலைகள்: இந்நிலையில் மணிப்பூர் படுகொலைகளைக் கண்டித்து திமுக மகளிரணி போராட்டங்களை நடத்துவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக மகளிரணி வெளியிட்ட அறிக்கையில், "பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக, ஊடகச் செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது. தாய்மையை அவமானப்படுத்தும் இந்நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு தடுக்கத் தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார். ஒன்றிய பா.ஜ.க. அரசும் மகளிருக்கெதிரான இக்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது.
கனிமொழி தலைமையில் போராட்டம்: மணிப்பூர் கலவரம் தொடங்கிய நேரத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது கண்டனத்தையும், கவலையையும் சமூக ஊடக வாயிலாக வெளிப்படுத்தினார். இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான நெஞ்சைப் பதற வைக்கும் இக்கொடுமையைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே
இன்று மாலை 4 மணியளவில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழ்நாடு முழுவதும்..: தொடர்ச்சியாக 24.07.2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். மாவட்டக் கழகச் செயலாளர்கள், மகளிர் அணி அமைப்பாளர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை சிறப்பாக நடத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாளை.. : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மணிப்பூர் படுகொலை விவகாரங்களால் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி உள்ளனர். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக நாளை திங்கள்கிழமை காங்கிரஸை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்த உள்ளனர். இதில் கனிமொழி எம்பி பங்கேற்கிறார். இதனால் சென்னையில் இன்று கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக மகளிரணியினர் போராட்டம் நடத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications