ஆழ்வார்க்கடியான் தமிழில் மட்டும் அய்யய்யோ? நிருபர் கேள்விக்கு "நாராயணனை" துணைக்கு அழைத்த மணிரத்னம்
சென்னை: பொன்னியின் செல்வன் டிரெய்லர்களில் மற்ற மொழிகளில் ஆழ்வார்கடியான் நாராயணா என சொல்லும் போது தமிழில் மட்டும் அய்யய்யோ என சொல்லியது ஏன் என்பது குறித்து மணிரத்னம் விளக்கமளித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்டோர் நடித்த படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
டிரெய்லர்களும் இந்த 4 மொழிகளில் வெளியானது. இதில் இந்து தர்ம வெறுப்போடு இந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக ஒரு குறிப்பிட்ட காட்சியை பாஜக ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

வந்தியத்தேவன்
அதாவது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் குதிரை வண்டியில் செல்லும் போது அம்புகளால் தாக்கப்பட்ட போது ஆழ்வார்க்கடியான் நாராயணா என அழைப்பார். அவர் வீர வைணவர் என்பதால் தனக்கு துன்பம் வரும் போது நாராயணா என அழைப்பதுதான் கதை. இது போல் நாராயணா என தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி டிரெய்லர்களில் ஆழ்வார்க்கடியான் அழைக்கிறார்.

பொன்னியின் செல்வன்
ஆனால் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் டிரெய்லரின் போது ஆழ்வார்க்கடியான் நாராயணா என சொல்லாமல் அய்யய்யோ என அழைக்கிறார். இது பாஜக, இந்து அமைப்புகளின் ஆதங்கமாகவும் குற்றச்சாட்டாகவும் இருக்கிறது. தமிழக மன்னர்களை பற்றி படங்கள் எடுக்கும் போது அவர்கள் எப்படியெல்லாம் சனாதன தர்மத்தை கடைப்பிடித்தார்கள் என்பதை காட்டாமல் இருப்பதா? என இந்து அமைப்புகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புத்தகத்தின்படி பார்த்தோமேயானால் ஆழ்வார்க்கடியான் நம்பி வீர வைணவர். அவர் நாராயணா என்றுதானே அழைக்க வேண்டும். இதை மாற்ற இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் அண்மையில் பத்திரிகையாளர்களை பொன்னியின் செல்வன் படக்குழு சந்தித்தது.

நகைச்சுவை பதில்
அப்போது மணிரத்னத்திடம் செய்தியாளர் ஒருவர், ஆழ்வார்க்கடியான் நம்பி தமிழில் ஏன் அய்யய்யோ என கத்துகிறார். மற்ற மொழிகளில் நாராயணா என சொல்வது ஏன், ஏன் இந்த மாற்றத்தை தமிழில் செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு மணிரத்னம், நாராயணா இப்படி ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டுமா? கவலைப்படாதீங்க, படம் முழுக்க நாராயணா நாராயணா என சொல்லிக் கொண்டே இருப்பார். அது போல் படத்தில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என மணிரத்னம் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications