துடித்துப்போன பாரதிராஜா.. மனோஜ் பாரதிராஜாவின் உடல் மின் மயானத்தில் தகனம்.. கலங்கி நின்ற பிரபலங்கள்
சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜாவின் இறுதிசடங்கு இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது. நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மனோஜ் உடலுக்கு உறவினர்கள், திரையுலக பிரமுகர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். மனோஜ் உடல் நீலாங்கரையில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ,பெசன்ட் நகர் மின்மாயனத்தில் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, குடும்பத்துடன் சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் மனோஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு மனோஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். வெறும் 48 வயதில் மாரடைப்பால் காலமானது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தள்ளது. மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தந்தை உச்சபட்சமாக இயக்குனராக இருந்த போதிலும் மனோஜ் பாரதிராஜாவால் சினிமாவில் பெரிய ஹீரோ ஆகமுடியவில்லையே என்ற ஏக்கம் இருந்து வந்துள்ளது.எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் நிராகரிக்கப்பட்டே வந்ததை நினைத்து வருத்தத்தில் இருந்து வந்தார். அவரது சினிமா பயணத்தை பொறுத்தவரை மணிரத்னம், ஷங்கர் போன்றோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ரஜினியின் எந்திரன் படத்திலும் உதவி இயக்குனராக இருந்தார். எந்திரனில் ரஜினிக்கு டூப் போட்டது மனோஜ் தான், 1999-ல் வெளியான தாஜ்மஹால் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்த படத்தை பாரதிராஜாவே இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.மேலும் பாரதிராஜா இயக்கிய ஈர நிலம் மற்றும் அல்லு அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், சாதுரியன், பேபி படங்களிலும் கதாநாயகனாக நடித்து இருந்தார். ஆனாலும் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் கதாநாயகனாக மனோஜ் தொடரவில்லை..
சரத்குமார், முரளியுடன் இணைந்து சமுத்திரம் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்தார். பாரதிராஜா இயக்கிய கடல் பூக்கள் படத்திலும் முரளியுடன் இணைந்து நடித்துள்ளார். இதேபோல் அன்னக்கொடி, வாய்மை, சாம்பியன், ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதேபோல் பாரதிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்த மார்கழி திங்கள் படத்தை மனோஜ் இயக்கி இருந்தார்.
மனோஜ் மலையாள நடிகை நந்தனாவை காதலித்து 2006-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஷிதா, மதிவதனி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மனோஜ் உடல் சேத்துப்பட்டில் இருந்து பாரதிராஜாவின் நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. பலரும் அஞ்சலி செலுத்தினர். மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று மாலை 4.30 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல் இறுதி ஊர்வலமாக வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மனோஜின் மகள்கள் மற்றும் குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்தனர். அதன்பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஏராளமான தலைவர்கள், இயக்குனர்கள், நடிகர்கள்,நடிகைகள் என தமிழ் திரையுலகில் பலரும் நேரில் வந்து மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications